பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியக் காதை

௯௫



மீதான உயர்குணமும் இனிய பண்பும்
மேவிவரும் உயர்மனிதர்; 'நினது ளத்தைத்
தாதாவென்' றன்பரெலாம் இரந்து நிற்கும்
தனிநட்புக் குரியமையினர்; தமிழுக் காக
வாதாடுங் கிளர்மனத்தார் உதவும் உள்ளம்
வாய்த்தசிதம்-பரநாதப் பெயரர்; ஈர்ந்தண்
போதான நகைமுகமும் கவருந் தோற்றப்
பொலிவதுவுங் கொண்டிலங்குந் தூய நெஞ்சர் 12

அல்லிதொன்றும் செயநினையார், நல்ல தொன்றே
அணுகுசிதம் பரநாதர், ஆங்கி லத்தும்
வல்லமைசேர் பேச்சாளர், ஆயி னுஞ்செந்
தமிழுக்குக் காவலராய் வாழ்ந்த செம்மல்
நல்ல தமிழ்ப் பெருமைஎலாம் விளக்கிக் காட்ட
நாடுபல சென்றுபறை சாற்றி வந்த
நல்லவரும் வல்லவரும் எங்கள் அன்பை
நயந்தவரும் பண்டிதர்பாற் பயின்றே ராவர். 13

'உரையின்றிக் கிடக்கின்ற கடுமை யான
உயர்நூல்கள் பலவற்றை நடத்துங் காலே
உரைசொல்லி நயஞ்சொல்லி அவற்றிற் கான
ஒப்புமையும் மேற்கோளும் எடுத்துக் காட்டி
வரைவின்றி வழங்குவதில் அவரை யொப்பார்
வாழ்நாளிற் கண்டதில்லை புலமை யாற்றல்
நிறைகண்டு வியந்திருப்போம்” என்றெம் நெஞ்சில்
நின்றசிதம் பரநாதர் நிமிர்ந்து சொன்னார். 14