பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

முன்னுரை

வலம்புரியில் நண்டர் ஒருவர் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு யான் சென்றிருந்த காலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வ. சுப. காணிக்கனாருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவ்வமயம் அவர் நம் பண்டித மணியவர்களின் நூற்றாண்டு விழா வருகிறது. அவர்தம் வரலாற்றைக் காப்பியமாக்கித் தருக' என என்பாற் கூறினர். யான், முதலில் இசைந்தேனல்லேன். பண்டிதமணியவர்கள் தலைசிறந்த தமிழ்ச் சான்றோர் மட்டுமல்லர்; சிவநெறிச் செல்வருங்கூட. ஆதலின் அவர்தம் வரலாற்றை நம்மால் எழுத இயலுமா? என்ற ஐயவினா என்னுள் எழுந்ததே அதற்குக் காரணம்.

குறிப்பிற் குறிப்புணர வல்லராய மாணிக்கனார் என் தயக்கத்தை உணர்ந்தவராய் 'இதனைக் கருவியாக் கொண்டு, மீண்டும் நம் மக்களுக்குத் தமிழுணர்வை யூட்டலாமன்றோ?' என வழி மொழிந்தார். தமிழ் என்றவுடன் தலை வணங்கும் இயல்பினனாகிய யானும் இசைந்தேகினும் கண் தொல்லையால் எழுத இயலாத நிலையையும் சுட்டிக் காட்டினேன். என் நிலைமையை நன்குணர்ந்த அவர் அனைத்து வகையானும் உதவத் தாம் ஏற்பாடு செய்வதாக மறுமொழி தந்தனர்.

பண்டிதமணியவர்களின் திருவுளப் பாங்கால், மேலைச்சிவபுரி, வ. பழ. சா. குடும்பத்தாரின் துணையுடன் உருவாக்கப்பட்ட சன்மார்க் சபையில், பள்ளிக்கல்வியும் தமிழ்க் கல்வியும் பயின்றவன் யான். அந்நாளில், அடிக்கடி பண்டிதமணியவர்கள் சபைக்கு வருகை தருவார்கள். அப்பொழுதெல்லாம் யானும் என் உடன் பயின்றாரும் அப்புலவர் மணிக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்யும் பேறு பெற்றுள்ளோம். மேலும் சபை ஆண்டு விழாவிற்காக எழுந்தருளிய விடலாநந்த அடிகள், கரந்தைக் கவியரசு, ரா. பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீ, இரா. இராகவய்யங்கார் போன்ற பெருமக்களுக்கெல்லாம் தொண்டு செய்து மகிழ்ந்ததை இன்று நிமைப்பினும் மெய்சிலிர்க்கிறது.