பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிவிழாக் காதை


மாவிலைத் தோர ணங்கள்
வயங்குறக் கட்டு வித்தார்;
பூவினிற் சரங்கள் கட்டிப்
புதுமணம் பரவ விட்டார்.
வாவியிற் பூத்து நிற்கும்
மலர்களும் கொணர்ந்து வைத்தார்;
காவெனக் குளிர்ந்து தோன்றக்
கடிநகர் கோலஞ் செய்தார்.3

இன்னியம் முழங்கும் ஓர்பால்
இசையுடன் மூவர் சொன்ன
நன்னயங் கெழுமு பாடல்
நலமுற ஒலிக்கும் ஓர்பால்
சின்னவர் ஒடி யாடுஞ்
சிரிப்பொலி கேட்கும் ஒர்பால்;
முன்னைய மறைகள் ஓதும்
முழக்கமுங் கேட்கும் ஒர்பால்.4

கண்களைக் கவருங் கோலம்
காதுகள் இனிக்கும் பாடல்
தண்ணெனும் பந்தர் யாவும்
சார்தரப் பொலிந்த தவ்வூர்;
பண்ணுயர் தமிழில் வல்ல
பண்டிதர்க் கறுபான் ஆண்டு
நண்ணிய தறிந்த மக்கள்
நகரினை அழகு செய்தார்.5