பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


கொட்டிய முழவின் ஒசை,
குலவிய குழலின் ஒசை,
[1] பட்டியல் மடவார் பேச்சு,
பச்சிளங் குழந்தை பாடல்,
[2] அட்டிலில் முனைவார் கூவல்,
ஆடவர் அங்கு மிங்கும்
இட்டநற் பணியின் மேவி
அலைபவர் எழுப்பும் ஒசை.6

வரவுரை கூறும் ஒசை
வருபவர் வழங்கும் ஒசை
மருவிய அன்பின் வந்தோர்
வழங்கிய வாழ்த்தின் ஒசை,
பரிசினைச் சுமந்து வந்தோர்
பரப்பிய ஓசை யெல்லாம்
செறிதரப் படர்ந்த தந்தச்
செந்தமிழ் மனையில் யாண்டும்.7

அணிதிகழ் முத்துப் பந்தர்
அமைந்தநல் லரங்கில் ஏறி
மணிவிழாக் காணுஞ் செம்மல்
மனையொடும் இணைந்தி ருந்தார்;
அணுகியே கதிரி ரண்டும்
அருகொருங் கிருந்த தொத்தார்
துணைவியின் கழுத்திற் றாலி
தொடுத்தனர் வாழ்த்தின் ஊடே.8


  1. பட்டு உடுத்த
  2. சமையற்கூடம்