பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.21

ஊன்றுகோல்

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

(415)

என்பது திருக்குறள், 'ஊன்றுகோல்' ஊற்றுக் கோலாகி வலித்தமை அஃது உறுதிப்பாட்டோடும் திண்ணிதாகவும் இருத்தல் வேண்டும் என்பதையும் நினைப்பூட்டுகிறது. பண்டிதமணி கையகத்தே எப்பொழுதும் விளங்கி, அன்னரது இயக்கத்திற்குத் துணைநின்ற அரிய ஊன்றுகோலினையே காப்பியப் பெயராகக் கொண்டமை இதற்கொரு தனிச் சிறப்பாகும். 'ஊன்றுகோல் போல உதவுதலாவது தளர்ந்துழி அதனை நீக்குதல்’ எனப் பரிமேலழகர் விளக்குவார். தமிழுக்குத் தளர்வு வராது எழுத்து, பேச்சுச் செம்மைகளை வற்புறுத்தி அம் மொழிவளர்ச்சிக்கு ஒர் ஊன்றுகோலென விளங்கியமையாலும், எப்பொழுதும் செவ்விய பேரரசரின் கையகத்தே விளங்கி அவர்தம் நடுவு நிலை, நல்லாட்சிகளை விளக்கி நின்ற செங்கோல் போலக் கதிரேசர் கையில் விளங்கியமையாலும் இக் காப்பியம் அச்சொல்லாட்சியில் அக்கறை காட்டிப் பலவிடத்தும் நன்கு புனைகின்றது. கவிஞரின் கருத்துப்படி கதிரேசற்கு ஏற்பட்டது 'காற்குறை' யேயாகும் (1:22). கதிரேசர் கையகத்தே கண்ட ஊன்றுகோல், கதிர்காமத்துக் கடவுள் கதிரேசன் கையில் தண்டுகொண்டு (தண்டாயுதம்) நிற்பதுபோல இருந்ததைப் பகுத்தறிவு நெறிப்பட்ட பண்பாளராம் முடியரசர் சொல்லாமற் சொல்கின்றார்.

"ஊன்றுகோல் ஒன்று பற்றி
உரத்துடன் நிமிர்ந்து நின்றான்
சான்றவர் போற்று மாறு
தண்டுகொண் டங்கு நின்றான்’

(2:18)

இளம்பிள்ளை வாதத்தால் பண்டிதமணியாரின் 'நவையுறு கால்கள் எங்கும் நடந்திட இயலவில்லை’ என்றாலும் அன்னாரின் குவிதரும் புகழோ யாண்டும் குலவிட நடந்த தங்கே என்கிறார் கவிஞர் (2:25).

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

}}

(618)