பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

29

“மறைமொழி யாகா தன்றோ ?
தெரிதரும் முன்னை நூல்கள்
தெளிவுறக் கற்கும் போது
பரிவுடன் பழைய பாடம்
படிப்பபோல் இருந்த தென்றார்” (2:9)

இங்ஙனம் நிகழ்ந்தமை புனைந்து கூறப்பட்டதன்று. காப்பிய நாயகரே வெளிப்படுத்திய உண்மையாகும். தமிழன்னயே தலைமகற்குற்ற குறைகண்டு மனம் நொந்து இக் கொடையினை நல்கினாள் என்னும்போது தான், புலவர் காப்பியப் புலவராகின்றார்.

“தலைமகன் இவனுக் குற்ற
தாழ்வினைக் கண்டு நொந்தாள்
இலை நிகர் இவனுக் கென்ன
இவனை நான் உயர்வு செய்வேன்
கலைமலி புலமை ஈவேன்
கதிரொளி பரவ என்று
தலையளி சொரிந்து நின்றாள்
தமிழன்னை அவனை நோக்கி" (2:19)

ஒரு காப்பியப் புலவன் கதை நிகழ்ச்சிகளையெல்லாம் கூறுவதோடு மட்டும் அமையானாய், தன் கருத்துகள், சிந்தனகளை யெல்லாம் பெய்து வைக்கும் பேழையாகவும் காப்பியத்தைப் பயன்படுத்திக் கொள்வான் என்பர். அதற் கொப்ப இவ்வாசிரியர் பேச்சாளன் இலக்கணம், மொழி பெயர்ப்பின் இலக்கணம், நூலாசிரியன் இலக்கணம், கவிஞன் இலக்கணம், ஈகை இலக்கணம் என்ற பல வரன்முறை விதிகள் போன்ற சிந்தனைகளை ஆங்காங்கு பெய்து வைத்துள்ளார். ஈகை என்பது எது?

“சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதில்லை
தூண்டுவதால் ஈகைமனம் பிறப்பதில்லை
மலைக்காட்டில் திரிமயில்கள் தோகைதன்னை
வற்புறுத்திக் கூறுவதால் விரிப்பதில்லை
மலைக்கோட்டு மாமுகிலும் பிறர் சொல்லை
மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவதில்லை
தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து
தானுவந்து வழங்குவதே ஈகையாகும்"