பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சபைகாண் காதை

௩௩


புலமிக்க கதிரேசர் தாய்மொ ழிக்குப்
புரிந்துவருந் தொண்டெல்லாம் சபையார் கண்டு
நலமிக்க அப்பணிக்குச் சிறப்புச் செய்ய
நாட்டமிகக் கொண்டவராய்ச் செட்டி நாட்டு
வளமிக்க மன்னரண்ணா மலையைக் கொண்டு
மணிப்புலவர் படமொன்றைத் திறந்து வைத்தார்;
தலைமைக்குத் தகுமணியார் நன்றி சொல்லிச்
'சபைக்குமுதல் மாணாக்கன் நான்தான்’என்றார்.30

எமக்கெல்லாந் தமிழமுதை ஊட்டி யூட்டி
எமதறிவை வளர்த்துநலந் தந்த தாயாம்
இமைக்குநிகர் என நின்று தமிழைக் காக்கும்
இயல்புடைய நற்சபைக்கோர் ஊன்று கோலாய்த்
தமக்குநிகர் இலாமணியார் விளங்கி நிற்கத்
தழைத்துவரும் அருள்மனத்தர் பழநி யப்பர்
அமைத்தசபை இவருக்கோர் ஊன்று கோலாய்
அமைந்திருக்கத் தமிழ்பரவிச் செழிக்கக் கண்டோம்.31

உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி,
உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய
மெள்ளத்தன் னாளாக்கிப், பாடல் வல்ல
மேலவர்தம் கூட்டத்துள் ஒருவ னாக்கி,
அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள்
அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய்; அந்தத்
தள்ளைக்கு நானடிமை யான திந்தச்
சன்மார்க்க சபையென்னுங் கோவி லிற்றான் 32