பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௯

ஊன்றுகோல்



புறப்பொருளாச் சமயத்தைக் கொண்டா ரல்லர்
புந்திமகிழ் அகப்பொருளென் றெண்ணி வாழ்ந்தார்
மறச்செயலுக் குற்றதென நினைந்தா ரல்லர்
மனத்துக்கண் அறத்துக்கே துணையாக் கொண்டார்
பிறர்க்குரிய சமயத்தைப் பகைத்து வாழும்
பேதைமையைக் கனவகத்தும் எண்ண வில்லை
மறப்பரிய மனையாள்மாட் டவர வர்க்கு
மதிப்பிருக்கும் அன்பிருக்கும் அதனா லென்ன? 6

கொண்டவன்பால், தன்னோடு பிறந்த வன்பால்
குலமங்கை செலுத்திவரும் அன்பி னுக்குள்
கண்டறியும் இருதன்மை இருத்தல் போலக்
கடைப்பிடித்து நடப்பதற்குச் சிறந்த தாக
அண்டியதன் சமயத்திற் சிறப்பு நோக்கும்
அடுத்தபிற சமயத்திற் பொதுவின் நோக்கும்
கொண்டொழுகல் யாவர்க்கும் கடமை என்பார்
கூடாராய்ப் பகைமைகொளல் மடமை என்பார் 7

கல்லானும் செம்பானும் வடித்து வைத்த
கடவுளெனும் வடிவங்கள் கண்டு வந்தே
எல்லாரும் நிற்பதுபோல் நில்லா ராகி
இணைந்துமணம் உவந்துருகிக் கசிந்து நின்று
சொல்லாலும், பொருளாலும், துய்க்கும் இன்பப்
பயனாலும் சொலற்கரிய பெருமைத் தாய
நல்லோர்தம் அருண்மொழிகள் நிறைந்த நூலுள்
நாயகனைக் கண்டுவப்பார் அருளின் செல்வர் 8