பக்கம்:ஊரார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7




மாமன். உங்கப்பன் சேர்த்து வைச்ச சொத்தெல்லாம் அவன் கிட்டேதான் இருக்குது. அந்த ரகசியமெல்லாம் உனக்குத் தெரியாது. படி படி, இந்த சாமியார் கிட்டே வந்து வந்து நிக்கறயே. இங்கே என்ன இருக்குது? விபூதி இருக்குது, கயித்துக் கட்டில் இருக்குது; முடிச்சுப் போட்ட கந்தலில் மூணுரூபா சில்லறை இருக்குது... நீ கொஞ்சம் டீ சாப்பிடறயாடா?"

"வேணாம், நான் இங்கேயேதான் இருப்பேன். பொளு தண்ணைக்கும் இருப்பேன். எனக்கு ஓங்களே ரொம்பப் பிடிச்சிருக்கு. ராத்திரி தூக்கம் வரப்போதான் வூட்டுக்குப் போவேன். இதென்ன போஷ்டர்?"

"இது போஷ்டர் இல்லேடா, பானர்! துணியிலே வரைஞ்சது. ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தியா? இத பார் அலமேலுவும் ஆடும் கிளிஞ்சு போய் கிடக்கறாங்க"...ஒரு எக்காளச் சிரிப்பு!பயங்கரக் குரல், பயப் படாத குரல்.

"இது எதுக்கு வச்சிருக்கீங்க?"

"கட்டில் கயிறு உறுத்துது. தூங்கி எளுந்திருச்சா முதுகிலே வரி வரியா கயிறு அளுந்திக் கிடக்குது. இந்த பானரைக் கட்டில் மேலே போட்டுக்கிட்டா சுகம்மா தாங்கறேன். ஆமாம், இப்ப வெல்லாம் அலமேலு மேல தான் தூக்கம் ... முருகா, முருகா!-"தான் சொன்னதை நினைத்துச் சாமியார் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

"என்ன தாத்தா சிரிக்கிறிங்க?"

"நான் தாத்தா இல்லேடா. தாடியும் மீசையும் பார்த்தா தாத்தா மாதிரி தோணுதா? எனக்கு ஐம்பது வயக கூட ஆகல்லே. நான் யார் மாதிரி இருக்கேன் சொல்லு, பாப்பம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/7&oldid=1232829" இலிருந்து மீள்விக்கப்பட்டது