பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தத் தெருவில் சிறிது உயர்ந்து விட்டது

"என்ன இருந்தாலும் இந்தப் புள்ளெக்கு ரொம்ப தைரியம் தான்" என்று பலரும் சொன்னார்கள்.

அது போக்குவரத்து மிகுந்த ரஸ்தா அல்ல. தெருக் காரர்கள் ஏதாவது சோலியின் பேரில் அப்படியும் இப்படியும் போவார்கள். வேறு தெருக்காரர்கள் எங்காவது செல்வார்கள். எப்பவாவது ஒரு வண்டி போகும். கட்டை வண்டி, மை போடப்படாத சக்கரங்கள் கிரீச்சிட, 'கடக்ட்டக்' என்று ஓசையிட்டுக் கொண்டு நகரும். வண்டிமாடுகளின் கழுத்து மணி ஒசை ஜோராக ஒலிக்கும். நாய் ஒன்று வேலை யில்லாவிட்டாலும், ஏதோ அவசர அலுவல் மேல் போகிறது போல், தெற்கே இருந்து வடக்கே ஓடும். அங்கொரு வீட்டுத் திண்ணைப் பக்கத்தில் நின்று மோந்து பார்க்கும். பிறகு தும்பைச் செடியை மோந்து பார்க்கும். காலைத்தூக்கி, செடியை நனைத்து விட்டு, வேகமாக நடக்கும். அப்புறம், புறப்பட்ட இடத்தில் எதையோ மறதியாக விட்டுவிட்டு வந்தது போலவும், அதை எடுப்பதற்காக விரைவது போலவும், அது வடக்கேயிருந்து தெற்கு நோக்கி ஓடியே போகும். பிச்சைக்காரன் வருவான். காய்கறி விற்பவன் வருவான்- இப்படி எவ்வளவோ வேடிக்கைகள்!

அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்துக்கு- களங்கமற்ற பெருவிழிகளுக்கு எல்லாமே இனிமைகள்தான்; எல்லாம் அற்புதமே.

அனைத்திலும் மேலான வேடிக்கை ஒன்று உண்டு. ஒரு மணிக்கு ஒரு தடவை டவுண் பஸ் அந்த வழியாக வரும். கால் மணி நேரம் கழித்துத் திரும்பிப் போகும். அப்படி வருகிற போதும், போகிற போதும் பஸ்ஸினுள் இருப்பவர்களைப் பார்ப்பதில் வள்ளி

7