பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாரும் வழிவிடுங்க ஸார், பெரிய மனுஷி வாறாங்க" என்றான்.

பொதுவாக அந்நேரத்துப் பஸ்ஸில் கூட்டம் இராது, அங்கொருவர் இங்கொருவராக ஆறேழு பேர்கள் இருந்தனர். எல்லோரும் வள்ளி அம்மை யையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்டக்டரின் பேச்சைக் கேட்டுச் சிரித்தார்கள்.

அவளுக்கு வெட்கமும் கூச்சமும் ஏற்பட்டன. தலையைக் குனிந்தபடி நடந்து ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்தாள்.

“புறப்படலாமா அம்மா?" என்று கேட்டுச் சிறு முறுவல் பூத்த கண்டக்டர் 'ரைட்' கொடுத்தான். பஸ்ஸும் உறுமிக் கொண்டு கிளம்பியது.

அது நேர்த்தியான பஸ். புத்தம் புதுசு. வெளிப் புறம் வெள்ளை வெளேர் என்றிருந்தது. பச்சை வர்ணம் பல இடங்களில் பளிச்சிட்டது. உள்ளே , கைப் பிடிக்க உதவும் உருளைக் கம்பிகள் எல்லாம் வெள்ளி மாதிரி மினுத்தன. எதிரே ஜோரான கடியாரம் ஒன்றிருந்தது. ஸீட்டுகள் ஜம்மென்று- அருமை பான மெத்தை மாதிரி-விளங்கின.

அனைத்தையும் பார்வையால் விழுங்கினாள் வள்ளி அம்மை. 'ஜன்னல்'களுக்கு கண்ணாடி மறைப்பு இருந்தது, அவள் பார்வையைச் சிறிது மறைத்தது. அதனால் அவள் ஸீட் மீது நின்று வெளியே பார்த்தாள்.

குளத்தங்கரை ரஸ்தா மீது பஸ் ஓடிக் கொண்டிருந்தது. குறுகலான, நொடி விழுந்த பாதை. ஒருபுறம் குளம். அதற்கப்பால் பனைமரங்களும், புல்வெளியும், தூரத்து மலையும், நெடுவானும். இன்னொரு பக்கம் பெரும் பள்ளம். பசும் பயிர், தலையாட்டும் வயல்கள்.

16