பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது.

அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை.

அவளுக்கு அந்தப் பெயர் பிடித்திருந்தது. தனது பெயர் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்படுவதும் உண்டு. அது எப்பொழுது என்றால், இதர சிறுமிகள் ஒன்றாகக் கூடிக் கொண்டு, ராகம் போட்டு

'வள்ளி அம்மே தெய்வானே,
உம் புருசன் வைவானேன்?
கச்சேரிக்குப் போவானேன்?
கையைக் கட்டி நிப்பானேன்?'

என்று இழுக்கும்போதுதான்.

அவ்வேளையில் அவளுக்கு ஒரு பதிலும் சொல்ல ஓடாது. கண்கள் நீரைக் கொட்டத் தயாராகி விடும். அவள் உலகத்தின் வெறுப்பை எல்லாம் தனது சின்னஞ்சிறு உள்ளத்தில் சேர்த்து, கூடிய அளவு முகத்தில் கொண்டு வந்து நிறுத்தி, 'வவ்வவ்வே' என்று கீழுதட்டை கடித்து 'வலிப்பு' காட்டுவாள்.

மற்றப் பிள்ளைகள் சும்மா இருந்து விடுவார்களா? 'வலிச்ச மோரையும் சுறிச்சுப்போம்- வண்ணாந் துறையும் வெளுத்துப்போம்' என்று வேறொரு