பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“தயவுசெய்து நில். நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்” என்று கதறிக்கொண்டே சாவித்திரி தொடர்ந்து ஓடினாள்.

நிழல் உருவம் நின்றது. சாவித்திரி அருகிலே சென்று உற்றுப் பார்த்தாள். அந்த உருவத்தின் முகத்தில் தெளிவும் கண்ணியமும் தெரிந்தன. உடனே அவளுடைய பயம் எங்கோ ஓடி மறைந்து விட்டது. மன அமைதியுடனும் தைரியத்துடனும் பேசினாள்.

“மன்னிக்கவேண்டும், தாங்கள் தான் யமதர்மராஜனா?

“ஆமாம்.”

“தங்களைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும், நான் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. இப்படித்தான் ஒவ்வொருவர் உயிரையும் எடுக்கத் தாங்களே நேரில் வருவீர்களா?”

“இல்லை. முக்கியமானவர்களுக்கு மட்டும்தான் வருவேன்” என்று கூறிக்கொண்டே யமன் நடந்தான்.

“என் கணவர் முக்கியமானவர் என்றால் இவ்வளவு இளமையில் அவர் உயிரைப் பறிப்பானேன்? அவர் ஒரு தவறும் செய்ய வில்லையே.”