பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

"மிகவும் வேகமாக நடக்கிறீர்களே!" என்றாள் அவள்.

"உனக்கு என்ன வேண்டும் சாவித்திரி?" என்றான் யமன் அவளை உற்றுப் பார்த்தபடி. “சத்தியவானின் உயிர்தான் வேண்டுமென்றால், மறந்துவிடு. அதுமட்டும் முடியவே முடியாது. யமன் சொன்ன சொல்லை மீறுவதும் இல்லை. எடுத்த உயிரைத் திரும்பக் கொடுப்பதும் இல்லை.”

"ஓ, அப்படியா?" என்று கேட்டுக்கொண்டே சாவித்திரி சிந்தனையுடன் தலை அசைத்தாள். "ஆகா. அவ்வளவு நிச்சயமானால், தாங்கள் செய்வதெல்லாம் நூற்றுக்கு நூறு சரியாகத் தான் இருக்கும். அப்படித்தானே?"

"சரியோ, தப்போ, அது எனக்கு முக்கியமல்ல.”

"அப்படியா! அடடே! எனக்கு எல்லாம் அதிசயமாக இருக்கிறது. சிறு வயதிலிருந்தே 'இது நல்லது, இதைச் செய்; அது கெட்டது, அதைச் செய்யாதே’ என்று பெரியவர்கள் சொல்லிச் சொல்லி என் மண்டையில் ஏற்றி விட்டார்கள். ஆனால், இந்த உபதேசமெல்லாம் மனிதர்களுக்கு மட்டும்தான், தேவர்களுக்குத் தேவையில்லை போலிருக்கிறது.”

"மரண விஷயம் என்பதே தனி".

"அது எப்படி? வாழ்வுக்குப் பொருந்துவது சாவுக்கும் பொருந்தும் அல்லவா?"

"நீ என்ன பொல்லாத பெண்ணாக இருக்கிறாயே. எதைச் சொன்னாலும் அதைத் திரித்துக் கூறி, அறிவுக்குப் பொருத்தமானது போலச் செய்து விடுகிறாயே.”

“மன்னிக்கவேண்டும். அதையே வேறு விதமாக விண்ணப்பிக்கிறேன். வாழ்வு முழுவதும் எது சரி என்பதைத் தெரிந்து கவனமாக நடந்தால், நியாயமாக............ "

"நிறுத்து" என்றான் யமன்."நீ என்னைத் தொடர்ந்து வராதிருந்தால், உனக்கு நான் இன்னொரு வரம் தருவேன்.”

“ஆகா! இன்னொரு வரமா? எவ்வளவு அன்பு. என்ன தாராளம்" என்று சாவித்திரி களிப்புடன் கூறினாள்.

"ஆனால் நினைவிருக்கட்டும். சத்தியவான் உயிரை மட்டும் நீ கேட்கக்கூடாது.”

“சரி. ஆனால் இப்போது என்ன கேட்பது? ஓ! முதல் வரத்துடனேயே சேர்த்துக் கேட்டிருக்கவேண்டும். மறந்து விட்