பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15

சொல்ல உரிமையும் இருக்கும்படி அரசன் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இருப்பவன்தான் கொடுங்கோலனாகாமல் தப்புவான்" என்று சொல்லிக்கொண்டே போனாள் சாவித்திரி. அவள் வார்த்தையைக் கேட்ட யமன் 'என்ன உயர்ந்த கருத்துக்கள்!' என்று வியந்து மகிழ்ந்தான். "நீ சொல்வது சரி. நியாய வழியிலும் சுதந்திரப் பாதையிலும் நிலைத்த மரபுகளே சட்டத்தைவிட உயர்ந்தவை," என்றான் .

"இப்படி இருப்பதற்கு, அரசவம்சம் வழிவழியாக, இடைவெளியில்லாமல் இருக்கவேண்டும் இல்லையா?” என்று கேட்டாள் சாவித்திரி.

"ஆமாம். ஆமாம். தொடர்ச்சி விட்டுப்போனால், குழப்பம், தடுமாற்றம் பதவிக்காகச் சண்டை எல்லாம், வந்து விடுமே” என்றான் யமன். சாவித்திரி திடீரென்று மெளனமானாள். அவள் முகத்தில் சோகம் படர்ந்தது. சோர்வடைந்தாள். அவளது அழகிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"என்ன, என்ன!" என்றான் யமன் வியப்புடன். “தாங்கள் அறியாததா? தங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தாங்கள் நிச்சயம் ஊகித்திருப்பீர்கள்?" என்றாள் சாவித்திரி ஒரு பெருமூச்சுடன்.

யமன் யோசித்தான். அவள் மனத்தில் என்ன நினைத்திருக்கிறாள்? இதை ஊகிப்பதா? புயலடிக்கும் காலத்தில் காற்று எந்தத் திசையில் வீசும் என்பதை ஊகிப்பது இதைவிட எளிது. "நான் என்ன நினைத்தேன் என்றால்...... " என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். இதோ இரண்டு ராஜ்யங்கள். இரண்டுக்கும் என்னைத் தவிர வாரிசு கிடையாது. எனக்குப் பிறகு என் தந்தையின் ராஜ்யமும் என் மாமனாரின் ராஜ்யம் என்ன ஆகுமோ? தாங்கள் சொன்னபடி, தடுமாற்றம், குழப்பம்,பதவிக்காகச் சண்டை, என்று எல்லாம் வந்துவிடுமே.இல்லையா? வீதிகளில் இரத்த ஆறு ஓடும். நகரங்கள் பாழடையும். அறுவடையை அறுக்க ஆள் இருக்காது. வீடுதோறும் பெண்களும் குழந்தைகளும் ஓலமிடுவார்கள்....."

"நிறுத்து!" என்று கத்தினான் யமன். யமன் சொல்கிறேன். அப்படியெல்லாம் நடக்காது. நடக்கவிடமாட்டேன். உன் வம்சத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க உனக்கு நூறு குழந்தைகளை வரமாக அளிக்கிறேன்,” என்றான்.