பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யமன் தன் தோல்வியை கௌரவத்துடன் ஒப்புக்கொண் டான். இருவரும் மறுபடி காட்டை நோக்கி நடந்தார்கள். "அடடா, இப்போதுதான் தெரிகிறது. இதில் நாரதரின் விஷமம் ஏதோ இருக்கிறது. சத்தியவான் உயிரை எடுக்க நானேதான் வரவேண்டும் என்று அவர் தான் துண்டினார்" என்றான் யமன்.

  அப்புறம் சொல்லவேண்டுமா? யமதர்மராஜன் சாவித்திரிக் குக் கொடுத்த எல்லா வரங்களும் நிறைவேறின. சத்தியவான் தூக்கம் நீங்கி எழுவதுபோல் புத்துணர்ச்சியுடன் எழுந்தான். கரிய உருவம் கொண்ட ஒரு விசித்திர மனிதனுடன் நெடுந் தூரம் போவது போல அவன் கனவு கண்டிருந்தான். அதை சாவித்திரியிடம் சொல்லத் துடித்தான் அவன்.
 சத்தியவான் தந்தை இழந்த பார்வையையும் ராஜ்யத் தையும் மீண்டும் பெற்றார். சாவித்திரிக்கும் வைரமுத்துமாலை கிடைத்தது. ஆனால்,அது யமன் வரம் இல்லாமலே கிடைத்தது!
 இந்த மாறுதல்களெல்லாம் நிகழ்ந்து, குதூ கலமான அமளி யெல்லாம் அடங்கியபின் ஒருநாள் சாவித்திரியின் தந்தை யான அரசர் அசுவபதி, மகளைத் தம் அருகிலே அழைத்து, "எல்லாம் சரி. யமனை எதிர்த்து வாதாட உனக்கு எப்படி யம்மா தைரியம் வந்தது?" என்று விசாரித்தார்.
 சாவித்திரி மெல்லச் சிரித்தாள். "எனது மாமியாரை நான் முதலில் சந்தித்தபோது, பல சோதிடர்கள் சேர்ந்து என் கணவரின் ஜாதகத்தைத் தயாரித்தது பற்றிக் கூறினார்கள். அவர்களிலே ஒருவர் பிறரைவிட அறிவாளியாம். அவர் பலன்சொல்லும்போது, 'சத்தியவானுக்கு மரண அபாயம் உண்டு. இருந்தாலும் மரணத்தைவிட வலிமை வாய்ந்த ஒரு சக்தியைக் கொண்டு அதைத் தடுக்க முடியும்' என்று சொல்லி யிருந்தாராம். அந்தச் செய்தியே எனக்கு நம்பிக்கை அளித்தது. தைரியமூட்டியது. மரண த்தைவிட வலிமை யான சக்தி என்னிடம் இருந்ததே- அதுதான் என் கணவ ரிடம் நான் கொண்ட அன்பு!" என்றாள்.