பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசனுக்கும் முனிவருக்கும் தெரியாமல் இதையெல்லாம் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் கிருஷா. அரசன் அவசர அவசரமாகத் திரும்பிச் சென்றதும் கிருஷா நேராகத் தன் தோழன் சிருங்கியிடம் சென்றான், சிருங்கி வேறுயாருமல்ல. முனிவர் சமிகரின் குமாரனேதான்.

சிருங்கி அப்போது பச்சிலைகளைப் பறித்துக்கொண்டிருந்தான். கிருஷா அவன்டம் பேச்சுக் கொடுத்தான்: “சிருங்கி, காட்டில் வாழும் நாம் அனைவரும் கடவுளுக்கு அடுத்தபடி அரசருக்குத்தான் கடமைப்பட்டவர் என்று ஒரு நாள் சொன்னாயல்லவா?”

“ஆமாம்” என்றான் சிருங்கி, பச்சிலைகளைப் பறித்துக் கொண்டே.

“அந்த அரசன் நம்மைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் கூட, நம்மை அவமதித்தாலும் கூட, அவனுக்கு நாம் மரியாதை காட்டவேண்டுமா?” என்று கேட்டான் கிருஷா.

“அரசன்-பரீட்சித்து அரசனையா சொல்கிறாய்? அந்த அரசன் காட்டிலே வாழ்ந்து வருகிறவர்களே அவமதிக்கமாட்டானே. அப்படி ஏன் செய்யப் போகிறான்?”

கிருஷா ஒரு குறும்புக்காரன். எனவே குறும்புடன் சொன்னான்: “நானே பார்த்தேன் என்று வைத்துக்கொள்ளேன். என் எதிரே, முனிவர் ஒருவரை அவன் அவமதித்தான் என்கிறேன்.”

“நான் நம்பமாட்டேன்” என்றான் சிருங்கி.

“சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது.காட்டட்டுமா?”

“ஆதாரமா?” சிருங்கி பொறுமை இழந்தான். “ஏன் புதிர் போடுகிறாய்? விஷயத்தைச் சொல்லு. நீ அள்க்கும் கதையைப் புரிந்துகொள்கிறேன்.”

“கதையா? நீயே வந்து பார்த்துக்கொள்” என்று அவனைக் கையோடு அழைத்து வந்தான். தியானத்தில் அமர்ந்திருந்த சமிகரைக் காட்டினான். செத்த பாம்பு அப்போதும் அவர் கழுத்தில் இருந்தது.