பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தகவல் அனுப்பியிருக்கிறாரே. அவருக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவியுங்கள்?” என்றான்.

இவ்வாறு கூறி குருமுகியை அனுப்பிவிட்டான். உடனே தன் மந்திரிமாரை அழைத்து, என்ன செய்வது என்று ஆராய்ந்தான். அதற்கு முன் காசியபர் என்பவருக்கு உடனே வரச்சொல்லி ஆள் அனுப்பினான். அவர் மிகக் கொடிய விஷப் பாம்புக் கடியையும் குணப்படுத்தும் சக்தி பெற்றவர்.

அமைச்சர்கள் முடிவுப்படி சிற்பிகளும் கட்டிடக் கலைஞர்களுமாக அரண்மனைக்கு வந்தார்கள். ஒரே நாளில் அற்புதமான ஒரு கட்டிடம் கட்டினார்கள். அரண்மனை வெளித் திடலில் ஒற்றைத் தூண் ஒன்றை உயர எழுப்பினார்கள். அதன் உச்சியில் ஒரு தனி அறையைக் கட்டிக் கொடுத்தார்கள். அங்கே அரசன் வசிக்கத் தொடங்கினான். துணைச் சுற்றிக் கீழேயும் மேலே அறை வாயிலிலும் ஆயுதம் தாங்கிய பல வீரர்கள் காவல் இருந்தனர். அரசன் அருகே ஒரு புழு கூடச் செல்ல முடியாதபடி பார்த்துக்கொண்டார்கள். அரசனின் குடும்பத்தாரையும், மந்திரிகளையும் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

அரசன் உத்தரவுப்படி காசியபர் அரண்மனை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். வழியில் ஒரு கிழவன் சோர்ந்து பரிதாபமாகக் கிடப்பதைக் கண்டார்.

“யாரப்பா நீ? ஏன் இவ்வாறு வாடியிருக்கிறாய்?” என்று விசாரித்தார்.