பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

'சாபக்கெடு அநேகமாக முடிந்துவிட்டது. துறவிகளை உள்ளே விடுவதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது. இவர்கள் அரசனை ஆசீர்வதிப்பார்கள்” என்று நினைத்தனர் காவலாளிகள். காவி அணிந்த துறவிகள் அரசனிடம் பழங்களை அளித்துவிட்டு உடனே புறப்பட்டுவிட்டார்கள். தமது உண்மை உருவமான பாம்பு வடிவத்தை அடைந்து, பாதாளத்துக்குச் சென்றுவிட்டனர்.

சூரியன் மறையும் நேரம் நெருங்கியதும் அரசனது அறையிலே யாவரும் ஒரே மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதோ சாபம் முடியும் நேரம் வந்துவிட்டது. அரசர் ஆபத்திலிருந்து தப்பிவிட்டார்’ என்று மகிழ்ந்தார்கள்.

அரசன் மந்திரிகளையும் குடும்பத்தாரையும் அழைத்தான். "சூரியன் மறைந்துகொண்டிருக்கிறான் துறவிகள் கொடுத்த பழங்களை எல்லாருமாகத் தின்ன வாருங்கள்" என்றான்.

எல்லாருமாகப் பழத்தட்டைச் சூழ்ந்தனர். அவரவருக்குப் பிடித்தமான பழத்தை எடுத்துக்கொண்டனர். அரசன் ஓர் அழகிய மாம்பழத்தை ஒரு கடி கடித்தான். இனிப்பாக இருந்தது. இன்னும் ஒரு கடி கடித்தான். மாங்கொட்டையருகே ஒரு புழு இருப்பதை அப்போது பார்த்தான். நல்ல பழத்தில் புழு இருப்பது வழக்கம்தானே! அதனால் அதைப் பெரிதாகப் பாராட்டாமல், அரசன், தன் கையில் அந்தக் கடித்த மாம்பழத்துடன் சூரியனைப் பார்த்தபடி நின்றான்.

"இனி தட்சகனுவது இங்கே வருவதாவது" என்றான் அரசன். அப்படியே புழுவைப் பார்த்தான். விளையாட்டாக, "என்ன புழுவே, உங்கள் பாம்பரசன் வரவேண்டுமே, ஏன் வர வில்லை? உனக்குத் தெரியுமா? உனக்கு எங்கே தெரியப்போகிறது. தட்சகன் அல்லவா இதற்கு பதில் சொல்லவேண்டும்!"

பரீட்சித்து அரசன் இப்படிச் சொன்னனோ இல்லையோ, அவன் கண் பிதுங்கும் படி ஒர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தச் சிறு புழு கிடுகிடு என்று பெரிதாக வளர்ந்தது. நாகராசனகிய அந்தப் பாம்பு தன் நீண்ட படத்தை எடுத்து ஆடியது. சூரியனின் கடைசிக் கிரணம் மறையும் நேரத்தில் தன் விஷ நாவால், மின்னலைப் போல் அரசனைத் தீண்டிவிட்டது: