பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஒரு நாள் பீமனும் அவன் தாய் குந்தியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது யாரோ அழும் குரல் கேட்டது. என்ன என்று அறிய குந்தி சரேலென எழுந்து பார்த்தாள். வீட்டுக்காரர் அறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது.

"ஐயோ இனி என்ன செய்வது?" என்று வீட்டுக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார். "நாம் இங்கேயே சாகவேண்டியதுதான். குடும்பத்தில் யாரை விட்டு விடுவது? நான் அப்போதே சொன்னேன், வேறு எங்கேயாவது போகலாம் என்று. நீதானே பிடிவாதமாக, 'இது நான் பிறந்த இடம், இங்கேயே சாகும்வரை இருப்போம்’ என்றாய். உன் இஷ்டப்படி நடக்கட்டும். நீ மட்டுமா. நாலு பேரும் இங்கேயே சாகலாம்” என்று பொரிந்து தள்ளினர்.

இது ஒன்றும் புரியாமல் குந்தி கேட்டுக்கொண்டே இருந்தாள். இப்போது வீட்டுக்காரரின் மனைவி பேசினாள்.

"நாமும் நம் குழந்தைகளும் ஒன்றாகச் சாவது என்று இருந்தால் வேறென்ன வேண்டும்? ஆனால் ஒருவரே ஒருவர் இறந்தால் போதுமே. இதைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேன். இந்த பச்சைக் குழந்தைகள் நமக்காக பலியாக முடியாது, அவர்கள் போய்விட்டால் அப்புறம் யார்? நீங்களோ நானோதான். நீங்கள் போய் விட்டாலோ சிறு குழந்தைகளும் நானும் எப்படி வாழ்வோம்? எனக்கும் அவர்களுக்கும் சோறு கிடைக்கச் செய்ய என்னால் முடியுமா? நேர்மையுடன் உயிர் வாழும்படியான வேலை ஏதாவது எனக்குக் கிடைக்குமா? பையனை என்னால் ஆளாக்கமுடியுமா, பெண்ணுக்குக் கல்யாணம் கட்டித் தரமுடியுமா? அதனல் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை உங்களிடம் விட்டு விட்டு நான் போகிறேன், பலியாக. இங்கே இருப்போம் என்று நான் தானே ஆசைப்பட்டேன்? அதற்கு தண்டணையாக இருக்கட்டும். இனி நமக்குள் இது பற்றிச் சச்சரவு வேண்டாம்."

பாவம், அன்பான கிராமவாசியின் குடும்பத்தில் ஏதோ ஒர் அபாயம் வர இருக்கிறது என்பது குந்திக்குப் புரிந்தது. எதாவது உதவ முடியுமா என்று பார்ப்போம் என்று நினைத்து ஒர் அடி எடுத்து வைத்தாள். அப்போது ஒரு சிறு பெண்ணின் குரல் கேட்டு மறுபடி நின்றாள். தான் பலியாகத் தயார் என்றாள் சிறுமி. அப்பாவும் அம்மாவும் தம்பியை வளர்த்துப் பெரியவனாக்கட்டும் என்ருள் அந்தப் பெண்.