பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

குந்தி தன் அறைக்கு வந்து, பாண்டவர்களிடம் பகனைப் பற்றிச் சொன்னாள். "அவனைச் சந்திக்க உங்களில் ஒருவரை அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறேன்?" என்றாள். பீமன் சிரித்தான். "நான்தானே அம்மா போகவேண்டும்? நீ என்னை மனதில் வைத்துக்கொண்டுதானே அவரிடம் பேசியிருப்பாய்? சரி, நான் போகிறேன். காரியம் முடிந்ததென்று வைத்துக்கொள்’ என்றான்.

அடுத்த நாள், பீமன் எழுந்தான். பகனுக்கு வைத்த சாப்பாட்டு வண்டியுடன் பகன் வாழ்ந்த காட்டுக்குப் போனான். பகன் தன் வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தபடி இருந்தான். கொழுக்கு மொழுக்கு என்று இருந்த பீமனை வெகு தூரத்திலேயே பார்த்து, 'நமக்கு நல்ல வேட்டைதான்’ என்று மகிழ்ந்தான். ஆனால் என்ன இது, மாடுகளைக் காணோமே? என்று புரியாமல் விழித்தான். அடுத்த நிமிஷம் பீமன் செய்தது அவனுக்கு வியப்பூட்டியது.

பீமன் தரையிலே அமர்ந்து, எதிரே பெரிய வாழை இலையை விரித்துக் கொண்டான். வண்டியிலிருந்த சோற்றைக் குவியலாகக் கொட்டித் தின்ன ஆரம்பித்தான். பகன் பார்த்தபடி இருக்க, சோற்றையும் கறியையும் பிற உண்டிகளையும் கப கபவென்று வயிற்றுக்குள் தள்ளினான் பீமன்.

காடே அதிரும் கர்ஜனையுடன் பகன் பாய்ந்தான். பீமனுக்கு சில கஜ தூரங்கள் முன் வந்து நின்றான். ஆனால் பீமன் இதைச் சட்டை செய்தவனாகவே தெரியவில்லை. தடித்த புளியமரம் போன்ற பகனின் கால்களை அலட்சியமாகப் பார்த்த படி பீமன் இன்னெரு கூடை சோறு எடுத்துச் சாப்பிட லானான். பகன் இன்னும் நெருங்கினான்.

"யாரடா அது முட்டாள், பகனின் கோபத்தைக் கிளறுவது?" என்று கர்ஜித்தான். "நீ எனக்கு ஆகாரமாக அனுப்பப் பட்டவன், தெரியுமாடா. எங்கேடா என் மாடுகள்??"

இன்னொரு கூடை சோறும் கறியும் தின்றுவிட்டு பீமன் சுருக்கமாக பதில் சொன்னன்: "மாடு கிடையாது."

"மாடு கிடையாதா? அப்படி என்ருல்?"பகனின் கோபம் எல்லை மீறிக்கொண்டிந்தது.

"ஊரிலே மாட்டுப் பஞ்சம்" என்றான் பீமன். "ஊரிலே பசுவும் மாடும் தேவை. குழந்தைகளுக்குப் பால் வேண்டுமே."