பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யமனை வென்றவள்

இளவரசி சாவித்திரி அவளுடைய தந்தை முன் நின்று கொண்டிருந்தாள். மெல்லிய கொடி போல அவள் அழகாக இருந்தாலும், அவளது மனம் உறுதியாக இருந்தது. முகத்தில் பிடிவாதம் தெரிந்தது. இந்த மாதிரி சமயங்களில் அவளது தந்தை வளைந்து கொடுத்துவிடுவார்.

"தந்தையே, நினைவிருக்கிறதா? என் கணவரை நானே தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்கள் சொன்னதுண்டா இல்லையா? இப்போது உங்கள் வார்த்தையை நீங்களே மீறலாமா?"

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தார் மன்னர். அதற்குள் நல்லவேளையாக நாரத முனிவர் குறுக்கிட்டுச் சூடான விவாதம் நேராமல் தடுத்தார். "குழந்தாய் சாவித்திரி, உன் தந்தை சொன்ன வார்த்தையை மீறவில்லை. நீ மணக்க விரும்பும் சத்தியவானைப் பற்றித்தான் அவர் என்னிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் விவரம் கூறிக்கொண்டிருக்கும்போது, 'சாவித்திரியையும் இங்கே வரச் சொல்கிறேன். தாங்கள் சொல்வதை அவளும் கேட்கட்டும்' என்று சொன்னார்.”