பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

"அப்படித் தாங்கள் என்னதான் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்?" என்று விசாரித்தாள் சாவித்திரி.

இந்த நாரதர் விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பது சாவித்திரிக்குத் தெரியும். கெட்டிக்காரிதான். ஆனால், நாரதர் அவளைவிடக் கெட்டிக்காரரல்லவா? அவர் தேவர்களுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி, நண்பராகவும் ஆலோசகராகவும் தூதராகவும் விளங்குகிறவர். நாரதர் செய்கை எப்போதும் நன்மையில்தான் முடியும். இறுதியில் நல்லபடியாக முடிந்தாலும், அவர் தலையிட்டவுடனே ஏற்படுவது தகராறுதான்! ஏனென்றால் தந்திரசாலியான நாரதர் மிகுந்த அறிவாளிகளைக்கூட அலைக்கழித்துவிடுவார்! இப்படிப்பட்ட நாரதருக்கு எப்படித் தகுந்த மரியாதை செலுத்த வேண்டும் என்பதைச் சாவித்திரி அறிந்துவைத்திருந்தாள்.

நாரதர் சொல்லலானார் : "நீ விரும்புகிறாயே சத்தியவான், அவன் நல்ல ராஜ வம்சத்தில் பிறந்தவன். சிறந்த இளைஞன். 'சத்தியவான்’ என்பது அவனுக்குப் பொருத்தமான பெயர். சத்தியத்தைத் தவிர அவன் வேறு எதையுமே பேசமாட்டான். அவன் புத்திசாலி. தைரியசாலி. பார்வை தெரியாத வயோதிகத் தந்தையிடம் அவனுக்கு எத்தகைய பக்தி! பாவம், அரசராக இருந்த அவனுடைய தந்தையை ஓர் உறவினன் நம்பிக்கைத் துரோகம் செய்து, காட்டுக்குத் துரத்திவிட்டான். பட்டத்துக்கு உரிமை யிருந்தும், சத்தியவான் அது பற்றிக் கவலைப்படவில்லை. காட்டிலே விறகு வெட்டி, தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறான்.”

"இதெல்லாம் எனக்குத் தெரியுமே!" என்றாள் சாவித்திரி.

"அப்படியா? உனக்கு இதுவும் தெரியும். மேலும் தெரியும் போலிருக்கிறதே!" என்று தூண்டிவிட்டார் நாரதர்.

"முதலில் தங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதைப் பார்ப்போம்” என்றாள் சாவித்திரி.

நாரதர் புன்னகையுடன், 'இந்தச் சின்னக் குட்டி என்னை மடக்கப் பார்க்கிறாளா?' என்று நினைத்துக்கொண்டார். பிறகு சொன்னார்: "உனக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும். அதைத்தான் உன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்றார்.

"அவருக்கு ஒரு கண்டம் இருக்கிறது; இன்றிலிருந்து சரியாக ஓராண்டு காலத்தில் இறந்துவிடுவார் என்ப்தைத்தானே