பக்கம்:எக்கோவின் காதல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

"அவள் என் அக்காள். நாங்கள் சென்னையிலிருக்கும் பொழுது அவளுக்குக் கலியாணமாகி விட்டது. கலியாணமானவுடனேயே நாங்கள் சிங்கப்பூருக்கு வந்து விட்டோம்” என்றாள்.

அப்பொழுது என் மைத்துனன் "சுயமரியாதை கொள்!" என்று பாடிக்கொண்டே வந்தான்.

"வேலா! அந்தப் பாட்டைப் பாடாதே! நிறுத்து!" என்றேன்.

ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பாட்டென்றால் ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே!” என்றாள் கமலம்.

"கமலம்! சொல்லுகிறேன் கேள்! எனது சொந்தஊர் சென்னை. நானும் தமிழ் ஆசிரியன்தான். ஆனால் என் கொள்கை வேறு, அவன் கொள்கை வேறு. இதனால் அவனைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. மேலும் தமிழாசிரியர் கழகத்திலே செயலாளர் பதவி எனக்குக் கிடைக்க வேண்டியது. அவனுக்குக் கிடைத்து விட்டது. வெறுப்பும் பொறாமையும் சேர்ந்தன.

"ஒரு நாள் அவன் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்தேன். திரும்ப அவன் அதை விளக்கிப் பேசினான். அவனுக்கே வெற்றி கிடைத்தது. தோல்வி, எனக்கு மிகுந்த அவமானத்தை உண்டாக்கியது. அது கோபத்தைக் கிளறிவிட்டது. வெறுப்பு - பொறாமை இவற்றோடு கோபமும் சேர்ந்தது. என்னைப் போலவே கிருஷ்ணமாச்சாரி என்பவனும் ஒருவன் இருந்தான். இருவரும் மந்திராலோசனை செய்தோம்.