பக்கம்:எக்கோவின் காதல்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

அதை விடுத்துப் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தின பழைய முறையைப் பின்பற்றி நடப்பதில் பயனில்லை. ஆகவே நமது உரிமைகளைப்பெற நாம் புரட்சி முறைகளைப் பின்பற்றி வெற்றி காணுவோமாக என்று கூறி நான் விடைபெற்றுக் கொள்கிறேன்” என்று கூறி முடித்தான் அர்ச்சுனன்.

இந்தப் பேச்சு, கிருஷ்ணன் கோபத்தைக் கிளறிவிட்டது. "பார்த்தாயா பழனி! அவன் பேசுவதை. அவன் நான் சொன்னதை அப்படியே தாக்கிப் பேசுகிறான். இருக்கட்டும். இவன் என்கையில் ஒருநாளைக்காவது அகப்படாமல் போக மாட்டான்”. பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கிருஷ்ணன் கோபமாகக் கூறினான்.

அதே சமயத்தில் மாதர் கழகச் செயலாளர் மதுரமும் அங்கு வந் திருந்தாள். அவள் அர்ச்சுனனைப் பார்த்து 'உங்கள் பேச்சு மிக நன்றாக இருந்தது' என்று பாராட்டியதோடு நில்லாமல் கை குலுக்கியதையும் பார்த்து விட்டான் கிருஷ்ணன்.

அதன் பிறகு கேட்க வேண்டுமா? கிருஷ்ணனுக்கு நெற்றிக்கண் இல்லாத குறைதான். இருந்திருந்தால் அர்ச்சுனனை அங்கேயே சுட்டெரித்திருப்பான். சக்கராயுதங் கூட இல்லாமற் போய்விட்டது. என் செய்வான் சட்டென்று எழுந்து சென்று விட்டான்.

அர்ச்சுனன் பேச்சில் மயங்கி, அவன் கை குலுக்கில். இன்பமடைந்த மதுரத்தின் அழைப்பு அடிக்கடி அர்ச்சுனனுக்குக் கிடைத்தது - கழகத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் அவனும் தட்டுவதில்லை.