பக்கம்:எக்கோவின் காதல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

புத்தகத்தின் மீது விழுந்தது. நான் அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தேன். பேசி விட்டாள் அவள். 'அது, என்ன புத்தகம் -?'

செயலற்றவனாய்க், 'காதல் நினைவுகள்' என்று கையிற் கொடுத்தேன்; சற்று அருகில் வந்து புரட்டினாள் அவள். என் உள்ளம் - ஏன் - உலகமே புரண்டது போலத் தோன்றியது எனக்கு. என் காதல் நினைவுகளை என்று நீ அறிவாயோ என்று மனத்திற் சொல்லிக் கொண்டேன் அந்த நூலின் ஆசிரியருக்கு என் மனமார வாழ்த்துக் கூறினேன்; அவளோடு பேச வாய்ப்புத் தந்த காரணத்திற்காக.

அவள் புரட்டி விட்டு, 'இதை நாளைக்குத் தருகிறேனே! என்றாள்.

தலையை ஆட்டினேன்,

இருள் வந்து எங்களைப் பிரித்து விட்டது. அன்று இரவெல்லாம் உறக்கம் ஏது? மறுநாள் அவளுக்குக் கொடுப்பதற்காக ஒரு புத்தகத்தைப் பொறுக்கி எடுத்தேன். மாலை அய்ந்து மணிக்கே கடற்கரை சென்றேன். அங்கே எனக்கு முன்பே அவள் காத்துக்கொண்டிருந்தாள். அருகில் சென்றதும் புத்தகத்தைத் தந்தாள். நன்றியறிதலுடன் நானும் சிரித்துக் கொண்டே வாங்கினேன். குறும்புத் தனமாக அவள் கையைத் தொட்டு வாங்கினேன். அவள் எண்ணத்தை அறிய வேண்டுமல்லவா? அதற்காகத்தான்! ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. எனக்கென்ன, அதைப்பற்றி! அவள் கையில் என் கைப்பட்டதே எனக்குப் பேரின்பமாயிருந்தது.