பக்கம்:எக்கோவின் காதல்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

ஒளி வீசவேண்டும். ஆனால் எப்படிச் சொல்வது-?புழைய வழக்கப்படியேதான் செய்தேன். இன்று சுறுசுறுப்பாகச் சென்றேன் கடற்கரைக்கு. அவளும் 'ஆஜர்' தான்!

'இதைப் பார்த்தீர்களா-?' என்று நான் எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கொடுத்தேன்.

'எங்கே பார்க்கலாம்! என்ன புத்தகம்?' என்று கையை நீட்டினாள். 'குடும்ப விளக்கு' என்றேன்.

நெருப்பைத் தொட்டது போல் வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள் கையை. முகத்தைப் பார்த்தேன். மலர் முகம் வாடியது. குடும்ப ...விளக்கு... என்று முணுமுணுத்தது அவள் வாய். நீர் கண்ணில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது. கண்ணீரைக் கண்ட என் மனம் கரைந்து விட்டது.

'ஏன்? இப்படித் திடிரென்று மாற்றம்-? ஏதாவது ...துன்பம்...' என்று பரிவுடன் கேட்டேன். அழுகை மிகுதியாயிற்று.

'என் கேள்வி உங்களுக்கு அதிக வருத்தத்தைத் தருவதானால் நான் மிகவும் வருந்துகிறேன்' என்றேன்.

'அப்படியொன்றுமில்லை. என் சகோதரர் போன்ற உங்களிடம் எனக்கென்ன வருத்தம். இந்தப் புத்தகம் என்னை இந்நிலைக்காக்கிற்று'.

'புத்தகமா-? புத்தகத்திற்கும் உங்கள் நிலைக்கும் என்ன சம்பந்தம்-?