பக்கம்:எக்கோவின் காதல்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

123

'ஆம்! புத்தகந்தான்! கேளுங்கள், என் கதையை! வக்கீல் வரதாச்சாரி மகள் நான். கமலம் என் பெயர். பணம் நிறைய இருந்ததால் மணத்தைப்பற்றி எண்ணாமல் படிப்பிலேயே சென்று கொண்டிருந்தது, என் இளமைப்பருவம். பணம் இருந்தால் பெண்ணுக்கு எத்தனை வயதானால் என்ன? மணம் தானாக நடக்கும். அந்த எண்ணத்தில் என் தந்தை இருந்தார். நானும் படித்து வந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் பயிற்சி பெற்றேன். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். நாளடைவில் ஆசிரியர் என் அன்பிற்குரியவரானார். திருமணம் நடந்தது. மணப்பரிசுகள் வந்து குவிந்தன. அப்பரிசுகளில் ஒன்று தான் இந்தக் குடும்ப விளக்கு'! இது யாரோ அவருடைய நண்பர் சிதம்பரத்திலிருந்து அனுப்பினார். அவர் பெயர்கூட இராஜன் என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகந்தான் எந்நேரமும் அவர் கையிலிருக்கும், 'கமலா!' என்பார். 'குடும்ப விளக்கா' என்பேன். 'ஆம்' என்பார். இருவரும் படிப்போம். அவர் படிக்க நான் கேட்பேன். நானும் படிப்பேன், சில சமயங்களில் அவர் கேட்டுக் கேட்டுக் களிப்பெய்துவார். அது, உண்மையில் எங்கள் குடும்ப விளக்காகவே விளங்கியது. ஆனால் நீடிக்கவில்லை ; அணைந்து விட்டது. இப்பொழுது வெறும் விளக்கு நான்! எண்ணெய் இல்லை" என்று கூறி முடிக்க முடியவில்லை அவளால், தொண்டை காய்ந்து விட்டது. 'கமலா! ஆம்! கமலாதான் அவள் பெயரும். நான் தான் 'குடும்ப விளக்கு' அனுப்பினேன். அவனுக்குப் பரிசாக!' என்றது என் உதட்டின் அசைவு.