பக்கம்:எக்கோவின் காதல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
அவமானச் சின்னம்

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி ஏற்படுத்தியது தான் அறிவு வளர்ச்சிக் கழகம்! முக்கியமாக மொழி, நாடு இவற்றின் முன்னேற்றங் கருதியே அது தொடங்கப்பட்டது. சமூகச் சீர்திருத்தங்களுக்காகவும் நன்முறையில் பாடுபட்டு வந்தது. மூடக்கொள்கைகளை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் அக்கழகத்திலே. கண்ணப்பனும் ஓர் உறுப்பினனாகச் சேர்க்கப் பட்டான் அதில். நல்ல குணமுடையவன். அமைதியான தோற்றம், அன்புப்பார்வை, அறிவுத் திறமை-இவைகள் தாண்டவமாடும் அவனிடத்திலே. யாரிடத்திலும். அதிகமாகப் பேசமாட்டான்.

கல்லூரி மாடிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் கண்ணப்பன். மாடியில் தான் கழகம் இருந்தது. அங்கே எப்பொழுதும் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். அரசியலைப்பற்றிப் பேச்சு நடக்கும். தலைவர்கள் சிலர் அவர்களுடைய பேச்சிலே, அகப்பட்டுக் கொண்டு திண்டாடு வார்கள், ஒரு தோழர் பாடுவார், ஒரு தோழர் ஆடுவார். சில சமயங்களில் அரட்டைக் (கச்சேரியும் நடைபெறும். கண்ணப்பன் மேலே செல்லும் பொழுது நடந்து கொண்டிருந்தது அதே கச்சேரி தான்.