பக்கம்:எக்கோவின் காதல்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

131

சின்னம்' என்று சொல்ல ஏன் தயங்கப் போகிறது இந்த உலகம்?”

“அம்மா! அது கிடக்கட்டும். முழுதும் சொல்லுங்கள் அழாதீர்கள். அழுது ஆவதென்ன? நடந்தது நடந்து விட்டது. சொல்லுங்கள்! சொல்லுங்களம்மா?”

“இதைப் படித்துப் பார்! பெயர் தான் கொஞ்சம் மாறி இருக்கிறது. மற்றதெல்லாம் என் கதை அப்படியே இருக் கிறது?” என்று புத்தகத்தைக் கொடுத்தாள். படித்துப் பார்த்தான்.

“சில மாதங்களில் என் தங்கைக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அவளுக்கு நகைகள் செய்ய ஒருவரிடம் கொடுத்தார்கள். அவர் சிறந்த வேலைக்காரர். நல்ல குணங்களும் உடையவர்;அழகாகவும் இருப்பார்; அவர்தான் இராமு ஆச்சாரியார். அவர் அடிக்கடி நகைகள் சம்பந்தமாக எங்கள் வீட்டிற்கு வந்து போவார். என் அப்பா முன் கோபக்காரர். ஆதலால் எப்படிப்பட்டவரிடத்திலே பேசினாலும் ஒரு தடவையாவது கோபம் வந்து விடும். ஆனால் நகை செய்யும் இவரிடம் ஒரு நாள் கூடக் கோபமாகப் பேசியதே கிடையாது. அப்பாவுக்குக் கோபம் வராதபடி அவர் அப்படிப்பேசி மயக்கிவிடுவார். அன்பாகப் பேசுவார். சிரிப்பு எப்பொழுதும் அவர் முகத்தில் திகழ்ந்துகொண்டேயிருக்கும். அதனால் எவரையும் கவர்ந்து விடுவார் பேச்சிலே. அவர் வந்துவிட்டால் நான் என்ன வேலையாயிருந்தாலும் ஓடிவந்து விடுவேன். நகைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் எல்லோரும். நான் அவர் பேச்சிலே சொக்கிப் போயிருப்பேன்.