பக்கம்:எக்கோவின் காதல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

இல்லை என்பதை, சிந்தனை முடிந்த பின்புதான் உணர்வேன். பணமிருந்தால் அந்த எண்ணம் தோன்றுவது கொஞ்சம் அரிதுதானே! பணம் இல்லாவிடினும் எப்படியேனும் அவனை உலகுக்குக் காட்ட வேண்டும் - அவன் கவிதையால் என் நாட்டிலே சமதர்மத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். பல பத்திரிகைகளுக்கு அவன் பாடல்களை அனுப்பினேன். சில நாளில் என்னிடமே திரும்பி வந்துவிட்டன. மக்கள் மன்றத்திலே மலரட்டும் என்று எண்ணினேன். தோல்வி! ஏன்? தமிழ் நாட்டிலே பிறந்த ஒரே குற்றத்திற்காக அந்தத் தோல்வி. அவன் வேற்று நாட்டிலே பிறந்திருந்தால் ஒவ்வொரு எழுத்தும் பொன்னாற் பொறிக்கப்படும்: இங்குப் பிறந்ததால் அவன் கவிதைகள் போற்றுவாரின்றி அழிந்து விடுமோ? என்று வருந்துவேன்.

அறிஞர்களை - அல்லல் எதுவரினும் மக்களுக்கே தொண்டு செய்யும் பெரியார்களை அலட்சியப் படுத்துவது - அவமானப் படுத்துவது தானே நம் நாட்டு மக்களின் பெருந்தன்மை! உண்ணும்போது - உறங்கும் போதுஉலவும்போது எப்பொழுதும் அவனைப்பற்றிய எண்ணந்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். முடிவின் விளைவுதான் மேலே கண்ட - வானவில் - என்ற பத்திரிகைச் செய்தி.

பத்திரிகைச் செய்தி வந்த சில தினங்களில் கண்ணன் கவிதை வராத பத்திரிகை ஒன்றேனும் இந்நாட்டில் இல்லை! புகழத் தொடங்கிவிட்டன. "புரட்சிக்கவி” “தென்னாட்டுத் தாகூர்” இப்படி ஏதோதோ பட்டங்கள் வழங்கின. 'வாழ்வுக்கு வழி' 'மங்கையர் மாண்பு' 'விடுதலை வேண்டுமா?' என்ற தலைப்புகளிலே புலவர் பெருமக்களால் மேடைகளிலே பேசப்பட்டன அவன் கவிதைகள்.