பக்கம்:எக்கோவின் காதல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

139

இதைக் கண்ட எனக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம், மக்களின் நிலைமை கண்டு வருத்தம் ஒரு பக்கம், என்ன உலகம் இது! அவன் உயிரோடு இருக்கும்பொழுது உணவின்றிக் கழித்த நாள் எத்தனை! அன்று ஆதரவு தருவாரில்லை . இன்று ! ....பேசுவது - எழுதுவது - பாடுவது எல்லாம் அவனைப்பற்றி. சீர்திருத்த வாதியை உயிரோடு வாட்டுவது - இறந்தபின் உருவச்சிலை நாட்டுவது-அவனைப் பலபடப் போற்றுவது! இது மக்களியல்பாகிவிட்டது.

உலகப் பெரும்போர் முடிந்தது. சிங்கப்பூரிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கப்பல் புறப்பட்டு விட்டது. அதிலே தமிழ்நாட்டு மக்கள் தம் தாயகத்திற்குத் திரும்பினர். அதே கப்பலில் என் நண்பன் கண்ணனும் வந்து சேர்ந்தான்.

“மறைந்த கவிஞர் மாளவில்லை. இழந்த மாணிக்கத்தைப் பெற்றுவிட்டோம். அவருக்குச் சென்னையிலே வரவேற்பும் பாராட்டும் நடைபெறும். கவிஞர் கண்ணன் வாழ்க”.

- வானவில்

இதைக்கண்ட என் நண்பனுக்கு மண்ணில் இருக்கிறோமா - விண்ணில் பறக்கிறோமா? என்ற அய்யம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் சமாளித்துக் கொண்டு “நண்பா! இது என்ன வேடிக்கை!” என்றான்.

"கண்ணா! உன்னைச் சிங்கப்பூரிலுள்ள என் நண்பன் கோபாலனிடம் அனுப்பினேன் அல்லவா. நீ அங்கு போய்ச் சேர்ந்தாயோ இல்லையோ போர் மூண்டு விட்டது; நின்றபாடில்லை . இதுதான் சமயம் என்று எண்ணி நீ கடலில் மறைந்தாய் என்று விளம்பரம் செய்தேன். அதன் பின்புதான்