பக்கம்:எக்கோவின் காதல்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

141

என்றிருந்துவிட்டேன். இனிமேலாவது நன்றாக அனுபவிக்க வேண்டும்”, என்று முடிவு கட்டினான்.

பணம்...... பணம் ......ஆம் அவன் மனம் பணத்திலே சென்று கொண்டிருந்தது. அந்த ஆசை எழுந்த பின்பு கேட்கவா வேண்டும். சினிமாக்காரர்கள் வீசிய வலையிலே எளிதிலே சிக்கிவிட்டான். அம்மட்டா? அரிவையரின் கடைக்கண் வீச்சிலே சொக்கிவிட்டான். என்னை மறந்தான். ஏன்? தன்னையே மறந்தான். இப்பொழுது அவனுக்கு என்னைவிடச் சிறந்த தோழர்கள் கருப்பு - சிவப்பு - வெள்ளைச் சீசாக்கள்தாம். அவன் மாறினான். ஆனாலும் கவிதையின் எழில் மாறவில்லை. உயிர்ப்பும் உணர்ச்சியும் பின்னிக் கிடந்தன.

ஒருநாள் தற்செயலாக அவனைக் கண்டேன்.

"கண்ணா! புராணங்களைப் பொசுக்கச் சொன்ன உன் பேனா முனை இன்று அவைகளுக்கு அரணாவதா? உன் கற்பனை, சினிமாவிலா நுழைய வேண்டும்? அது சீர்திருத்த உருவிலே நுழைந்திருந்தாலும் நான் மகிழ்ந்திருப்பேன். மக்களை மறுபடியும் மடமைக்கு இழுத்துச் செல்கிறதே உன் கற்பனை!” என்று வருந்திக் கேட்டேன்.

"நண்பா! என்ன இப்படிப் பேசுகிறாய்! உலகமே உனக்குத் தெரியவில்லையே! பணம் நிறையக் கிடைக்கிறது. அதனால் படத்துறையில் இறங்கினேன் புராணத்தை எழுதினாலும் என் பெயர் அங்கே பொறிக்கப்பட்டிருக்காது; அப்படியிருக்க நீ ஏதோ குடிமூழ்கிவிட்டது போலப் பேசுகிறாயே!” என்று மிகவும் சாதாரணமாக விடை தந்தான்