142
எக்கோவின் காதல் ❖
கவியரசர் முடியரசன்
"கண்ணா ! நீயா பேசுகிறாய்! பணத்திற்கு உன் உள்ளம் பணிந்து விட்டதா? உன் பெயர் பொறிக்கப் பட்டிருக்காது என்றால் மக்களை ஏமாற்றும் எண்ணமா உனக்கு? பணத்தை அன்று வெறுத்தாய். ஆனால் இன்று..? எத்துறையிலும் அடிமை கூடாது என்ற நீ, இன்று பணத்திற்கு அடிமையாக்கினாய் உன் உள்ளத்தை. அவ்வளவில் நின்றாயா? மாதர்கள் மையலிலும் மனத்தை அழுந்த விட்டு விட்டாயாமே? உன் போன்ற கவிஞனுக்கு இது அழகா? என்று மறுபடியும் கேட்டேன்.
"ஆம் நண்பா! நான் கவிஞன். கவி உள்ளம் என்பால் இருக்கிறது என்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய். அழகு எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் மனத்தைப் பறிகொடுத்து விடுவான் கவிஞன். காக்கைச் சிறகினிலே - காட்டு மயில் தோகையிலே - எந்தப் பொருளிடத்தும் அழகைக் காண்கிறான் கவிஞன். அப்படியிருக்க இயல்பாகவே அமைந்த எவர் - கண்ணுக்கும் புலனாகின்ற மங்கையர் அழகு மட்டும் கவிஞன் கண்ணுக்கு மறைந்தா நிற்கும்? அழகில்லாத பொருளிடத்தும் அதைக்கண்ட நான் அரிவையர்பால் அழகின் வரம்பைக் கண்டேன். அழகை அனுபவிக்கிறேன். இதில் என்ன குற்றம்? அவர்களே வலியவரும்பொழுது.............. என் மனம் என்ன கல்லா? அழகு எதற்கு? மனிதன் நுகரத்தானே?”
"கண்ணா ! என்ன பித்துப் பிடித்தவன் போலப் பிதற்றுகிறாய்! ஏன் இப்படிக் கெட்டுவிட்டது உன் மனம்? குற்றங்களை உன் புலமையால் மறைக்கப் பார்க்கிறாய். அது பொருந்தாது. இதனுடன் குடிக்கவும் பழகி விட்டாயாமே? அதற்கும் சமாதானம் சொல்வாயோ? வேண்டாம் கண்ணா!