பக்கம்:எக்கோவின் காதல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

25


நான் எப்படித் தமிழ்ப் பெண்களின் புகழை நிலைநாட்ட முடியும்? நானும் போர்க்கோலத்திற்றான் இருக்கிறேன் - என்று சொல்லிச் சென்றுவிட்டாள்.

அன்று ஒருவருமே பொங்கல் கொண்டாடவில்லை. எப்பொழுதும் போலவே உணவு முறைகள் நடைபெற்றன.

எதையோ எண்ணிக் கொண்டவன் போல விரைவாக மாடியிலிருந்து இறங்கி வந்தான். வந்தவன் ஒரு அறையில் விம்மல் சத்தங்கேட்டு நின்றுவிட்டான்.

‘விழாக் கொண்டாடவில்லை யென்று ஒருவேளை மல்லிகாதான் அழுதுகொண்டிருக்கிறாளோ’ என்று அய்யப்பட்டு மெதுவாகச் சன்னல் வழி உள்ளே கூர்ந்து பார்த்தான். ஓர் இளம் பெண் படுக்கையிற் கிடந்தாள். தலை அவிழ்ந்து கிடந்தது. எளிமையான தோற்றத்தைக் காட்டும் புடவை; நகைகள் இன்றிக் காணப்பட்ட உறுப்புகள்; படுத்த வண்ணமாக விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் அந்தப் பெண். அக்காட்சி அவன் மனத்தை இளக்கி விட்டது. கதவைத் திறந்துகொண்டு தடதடவென்று உள்ளே நுழைந்தான்.

காலடிச் சத்தங்கேட்டுத் திடுக்கிட்டுத் தலையை மட்டும் நிமிர்த்தினாள். செக்கச் சிவந்திருந்த கண்களிலிருந்து சிதறி ஒடின கண்ணிர்த்துளிகள். உதடுகள் படபடத்தன. இதைக் கண்ட எக்கோ, ‘நீ யாரம்மா? ஏன் இப்படித் தனித்து அழுது கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டான்.

‘அது என் தலை விதி’ - என்று சொல்லிக்கொண்டே விர்ரென்று வெளியே சென்றுவிட்டாள்.

‘விதி! மண்ணாங்கட்டி விதி! விதி, விதி என்று சொல்லித் தானே மக்கள் பாதாளத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கிறார்கள்.