பக்கம்:எக்கோவின் காதல்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

'நான் இப்படியாகுமென்று கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வந்து விடக்கூடாதா' என்று கெஞ்சினாள்.

'மன்னிப்பு! நான் யாரிடம் மன்னிப்புக் கோருவது? என்ன குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்பது? எழுத்துரிமை பேச்சுரிமை இவற்றைப் பறிக்கும் எதேச்சாதிகாரிகளிடமா மன்னிப்புக் கேட்பது? நான் மன்னிப்புக் கேட்டால், 'எழுத்தில் வீரத்தைக் காட்டிச் செயலில் பின்வாங்கும் துரோகி, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தன்' என்று என்னைத் தூற்றுவார்கள்; மல்லிகாவும் கோழையின் மனைவி என்று இகழப்படுவாள். இச்சிறு தண்டனைக்கே கலங்கும் நீ நாளை எனக்குத் துக்குத் தண்டனை தந்தால் மகிழ்ச்சியடையும் தமிழ்ப் பெண்ணாகவா உன்னைப் பார்க்க முடியும்? இப்படிப்பட்ட உன்னை, 'கொரில்லாப் பெண்' என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயே! இது, உனக்கு மட்டுமின்றி உன் இனத்திற்கே - பெண்கள் கூட்டத்திற்கே இழிவைத் தரும்' என்று கண்டிப்பான குரலில் பேசினான்.

'கொரில்லாப் பெண்! கொரில்லாப்பெண்!' இந்தச் சொற்கள் சுழன்று சுழன்று வந்து அவள் செவியில் மோதின. நிமிர்ந்து நின்றாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

'ஆம், மறந்து விட்டேன்; மன்னிக்கவும். நள்ளிரவு என்றும் பாராமல் கைது செய்ய வருகின்ற அரசாங்கம் நல்ல அரசாங்கந்தான். அதுவும் என்ன குற்றத்தைக் கண்டு பிடித்து விட்டது? மக்கள்நிலை உயர வேண்டும் என்று கூறியது ஒரு குற்றமா? அதைப் பற்றித் தன் கருத்தை எழுதியது ஒரு குற்றமா? இல்லை மக்கள் நிலை உயரக்கூடாது என்று அரசாங்கம் கருதுகிறதா? அப்படிப்பட்ட அரசாங்கந்தான்