உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எக்கோவின் காதல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

'அக்கா! அக்கா! இதைப் படித்துப் பார்' என்று பதற்றத்துடன் அவள் கையிற் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தாள் மல்லிகா.

'எக்கோ, அரசாங்கத்திற்கு முரணாக, 'சுடுகாட்டிலே’ என்ற கட்டுரையை எழுதியதற்காக ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார்!

இதைப் படித்ததும் தலை கிறுகிறுத்தது! கடுங்காவல்! எள்ளளவும்

கள்ளமில்லாத என் எக்கோவிற்கா கடுங்காவல்! இத்தகைய கொடுங்கோன்மை சுடுகாட்டிலே புதைக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த நாள் வந்தே தீரும்! என்று சொல்லிவிட்டுக் கையைக் கட்டிய வண்ணம் அங்குமிங்கும் உலவினாள். ஏதோ முடிவிற்கு வந்தவள் போல் வெளியே சென்றாள்.

மறுநாள் மாலை ஒரே கூட்டம். போலீசு அங்கு மிங்கும் கைத்தடிகளுடன் உலவிக்கொண்டிருந்தது. துப்பாக்கி தாங்கிய படையும் அணிவகுத்து நின்றது. குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கப்பட்டது. மல்லிகா எழுந்து நின்றாள். அவள், கூட்டத்தைச் சுற்றிப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தாள். அவள் அப்பொழுது ஒரு படைத்தலைவி போலக் காணப்பட்டாள்.

'தோழர்களே! தோழியர்களே! நாம் எழுத்துரிமையற்ற பேச்சுரிமையற்ற நாட்டிலே வாழ்கிறோம். ஏன் எக்கோ கைது செய்யப்பட்டார்? திருடினாரா? கொலை செய்தாரா? அல்லது கொலை கொள்ளை நடத்தும்படி மக்களைத் தூண்டி விட்டாரா? மனித சமுதாயம் உரிமை பெற்று விளங்கவேண்டும்