40
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
ஊர்மிளாவின் தாய் என் தகப்பனாருடன் பிறந்த அத்தை. வாழ்க்கைப்பட்ட இடம் பெரிய இடம். பல வேலி நிலங்கள் உண்டு. வீடு வாசல், சொத்து சுகம் எல்லாம் நிறைந்த இடம். அவ்வளவு பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டிருந்தாலும் தன் மகளை எனக்கே கொடுக்க வேண்டும் என்பது என் அத்தையின் ஆசை.
எனக்கும் அங்கேயே மணஞ் செய்து கொள்ள வேண்டுமென்றுதான் விருப்பம்; பணத்துக்கு ஆசைப்பட்டன்று, ஊர்மிளாவின் உள்ளமும் உடலும் என்னை அந்த உறுதிக்குக் கொண்டு வந்தன.
வழக்கம் போல இந்தத் தடவையும் முதற்பருவ விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்திருந்தேன்.
'ஊர்மிளா கொஞ்சம் குடிக்கத் தண்ணிர் கொண்டு வா!' என்றேன்.
'நான்தான் இனிமேல் கொண்டுவர முடியாது என்று சொல்லி விட்டேனே; நான் கொண்டு வரவேமாட்டேன்’ என்றாள் அவள்.
'சீ! கழுதை! கேட்டால் கொடுத்தால் என்னவாம் மாட்டேன் என்றா சொல்வது? இதுவா மரியாதை? என்று எனக்காகப் பரிந்து பேசினாள் என் அத்தை.
'இல்லம்மா! அத்தான் சும்மா சும்மா கேலி பண்ணுதம்மா'
'கேலி செய்தால் என்ன! அத்தான் தானே, போம்மா போ! தண்ணீர் கொண்டு போய்க்கொடு'
தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து தந்தாள்.