பக்கம்:எக்கோவின் காதல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

49

'பின் ஏன் இங்கு வந்தாய்?' என்றேன்.

'நான் வருவேன் என்று விழித்துக் கொண்டிருப்பீர்களே சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்.'

'இதற்கு வந்திருக்க வேண்டாமே' என்று கொஞ்சங் கோபமாகப் பதில் சொன்னேன்.

'சரி நான் வருகிறேன். அம்மா விழித்துக் கொள்வார்கள்' என்றாள்.

‘போவதாயிருந்தால் போகலாம்' என்று சற்றுக் கடுமையாகவே சொன்னேன். அவள் கண்களிலிருந்து இரண்டு முத்துகள் உதிர்ந்தன.

'ஊர்மிளா' என்று அனைத்தேன்.

'அத்தான்' என்று மார்பிற் சாய்ந்து கொண்டாள்.

அடடா! இன்பம்! இன்பம்! இலக்கிய இன்பம்!

வெளியிற் சென்று உலவிவிட்டு வந்து, வீட்டிற்குள் நுழையும்போது அத்தையும் மாமாவும் ஏதோ உரத்துப் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. என்னைப் பற்றிப் பேசுவதாகத் தெரிந்தது. சட்டென்று நின்று கேட்டேன்,

'முடியவே முடியாது, நீ எவ்வளவு சொன்னாலும் நான் சம்மதிக்க மாட்டேன். ஏன் சொத்தென்ன - கெளரவமென்ன - ஏன் பெண்ணை போயும் போயும் ஒரு தமிழ் வாத்தியாருக்கா கொடுப்பது? ஒருக்காலும் முடியாது. இன்னொருமுறை இந்தப் பேச்சை என்னிடம் பேசாதே!'