பக்கம்:எக்கோவின் காதல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
கண்மூடி வழக்கம்


“என்ன வேலா! எங்கே புறப்படப் போகிறாய்? 'தடப்புடலாக அலங்காரஞ் செய்து கொள்கிறாயே, எங்கேயாவது விருந்தா?” என்று கேட்டுக் கொண்டே என் நண்பன் வேலனுடைய வீட்டிற்குள் நுழைந்தேன்.

“வாப்பா துரை! நல்லவேளை நீயே வந்து விட்டாய்! ம்....ம்....தலையை வாரிக்கொள்; பவுடர் போட்டுக் கொள்கிறாயா?" என்றான்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா" எங்கே என்று கேட்டால் என்னென்னவோ சொல்கிறாயே!" என்றேன்.

"வா திருவொற்றியூருக்குப் போகலாம். இன்றைக்குத் தைப்பூசம் அல்லவா! இராமலிங்க வள்ளலாருக்குத் திருவிழா நடைபெறும். அதைப்பார்த்து விட்டு வருவோம். வா!” என்று இழுத்துக்கொண்டு சென்றான்.

நண்பன் சொல்லைத் தட்டமுடியாமல் நானும் சென்றேன். இரயில் புறப்படும் சமயம் ஓடி ஏறி விட்டோம்.

"வேலா! இன்னும் உனக்கு இந்தப் பைத்தியம் விடவில்லையா?” என்றேன்.