பக்கம்:எக்கோவின் காதல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

55

மற்ற கோவில்களில் செய்யும் மரியாதைகளைத் தானே செய்கிறார்கள். நீயும் அப்படியேதான் நடந்து கொள்வாய். அதை விடுத்து ஏதேனும் உபதேசம் செய்யப் போகிறாயோ? இந்தக் 'கண்மூடிவழக்க'மெல்லாம் உன்னளவில் 'மண்மூடிப் போகவில்லையே' என்று கொஞ்சம் ஆவேசமாகவே நான் பேசினேன்.

'சரி சரி வந்தது வந்து விட்டோம். இனி என்ன அதைப்பற்றிப் பேசுவது' என்று வேலன் சொல்வதற்குள் திருவொற்றியூரை அடைந்தோம்.

வண்டியிலிருந்து இறங்கி வேலன் மனைவியும் பக்கத்து வீட்டாரும் தங்கியிருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் பெரும் பாடுபட்டுக் கடைசியில் கண்டுபிடித்து விட்டோம்.

நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் அந்தப் பெண்கள் கூட்டத்தில் ஒரு பாவை மீது என் பார்வை விழுந்தது. அவள் தோற்றம் என் எண்ணத்தைக் கிளறிவிட்டது.

“வேலா அந்தப் பெண் யார்?” என்றேன்.

'விதவை' என்றான் வேலன்.

'அட!அந்தக் கிழவியைக் கேட்கவில்லை . கிழவிக்குப் பக்கத்தில் இருக்கும் கிளியைப் பற்றிக் கேட்கிறேன்.'

'அவளைத் தானப்பா நானும் சொல்கிறேன். அவள் ஒரு விதவை. அவளுக்கு வயது பதினான்கு: கணவன் இறந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கள் சொந்தக்காரப் பெண். போதுமா அவளைப் பற்றிய விளக்கம்'.

"என்ன! அவள் விதவையா?” மின்சாரத்தால் தாக்குண்டமைப்போல் என் இதயத்திலிருந்து வெளிவந்தது இந்த வினா!