பக்கம்:எக்கோவின் காதல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

எதிர்த்துச் செல்லும் சுறா நான். பற்றுக்கோடின்றிப் பரிதவிக்கும் அவள் சாய்வது சரியன்று. இனிமேல் நான் நீர். அவள் மீன். நான் தென்றல்; அதில் ஒன்றிவரும் மன்றல் அவள் என்ற முடிவுக்கு வந்தேன்.

'வேலா! வேலா!' என்று அழைத்துக் கொண்டே அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தேன். ஒருவரையும் காண வில்லை.

'வேலா!' என்று மீண்டும் சிறிது உரத்துக் கூவினேன்.

உள் அறையிலிருந்து இல்லை என்று பதில் வந்தது. அதைத் தொடர்ந்து எங்கோ அவசர வேலையாகப் போயிருக்கிறார் என்ற குரலும் வந்தது. நிமிர்ந்து பார்த்தேன். நிலையைப் பிடித்துக் கொண்டு நீலநிறப் பட்டுடுத்தி நின்றிருந்தாள் புனிதம்.

புனிதம்! இது வியப்பில் வெளிவந்த மூச்சு பேச்சில்லை!

நிலைத்து நின்ற நான் சமாளித்துக் கொண்டு சரி வருகிறேன். என்று அடி எடுத்து வைத்தேன்.

'இல்லை ..... உங்களை .... வந்தால் இருக்கச் சொன்னார்' என்று புனிதம் இழுத்துச் சொன்னாள். 'மரகதம் எங்கே?' என்றேன். மரகதம் வேலன் மனைவி.

'எதிர்வீட்டிற்குப் போயிருக்கிறாள்' என்று நாணிக் கொண்டு விடையளித்தாள் புனிதம்.

ஒரு வகையாக அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.