பக்கம்:எக்கோவின் காதல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

67

 படுத்தியதால் அவரை மணந்து கொண்டாள். மணந்தும் சரியான முறையில் அன்போடு அவருடன் பழகவில்லை . இதனால் குடும்பத்தில் அடிக்கடி குழப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு நாள் தற்கொலை செய்து (கொண்டாள்.

மூன்றாம் மனைவி இறந்து மூன்று மாதங்கள் கூட நிரம்பவில்லை. நான்காம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அவர் சும்மாயிருந்தாலும் பெண் வீட்டார் சும்மாயிருக்க விடவில்லை . சிபாரிசுக்கு மேல் சிபாரிசு! பணக்காரர் அல்லவா! எப்படியாவது பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்தால் போதும் என்று சாதகங்கள் வந்து குவிந்தன. அந்த நான்காவது மணத்திற்குத்தான் மேலே பஞ்சாங்க ஆராய்ச்சி நடந்தது. மணமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோடீசுவரர் வீட்டுக் கலியாணமென்றால் கூட்டத்திற்கும் குதூகலத்திற்கும் கேட்கவா வேண்டும்!

கூட்டத்திலிருந்தோர் மணத்திற்குச் செலவழிந்த தொகையைப் பற்றியும் பண்ட பாத்திரங்களைப் பற்றியும் இசை மன்னர்களின் இசையரங்குகளைப் பற்றியும், அதைக் காண வந்த மக்கள் திரளையும், நகைகளையும் இன்னும் இவை போன்றவைகளையும் பற்றித்தான் பேசிக் கொண்டார்களே ஒழிய, அந்தப் பெண் செலவழித்த கண்ணீரையும் அவள் உள்ளக் குமுறலிலிருந்து எழும்பிய சோகக் குரலையும் பற்றி யாரும் பேசவும் இல்லை . ஏன்? எண்ணவும் இல்லை . அந்த மக்கள் கூட்டம் இதைத்தானா புதிதாகப் பார்க்கிறது. பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கண்களல்லவா அந்தக் கண்கள்! ஆனாலும் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இரண்டு இளைஞர்களின் உள்ளங்கள் மட்டும், உள்ளக் கருத்துக்