பக்கம்:எக்கோவின் காதல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


அவ்வளவு தாராளமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார் நாள் தோறும் முகவழிப்பு, வாசனைப் பூச்சுகள் தவறுவதில்லை. தன் முகத்திலுள்ள இரண்டொரு நரையும், சுருங்கலும் அவளுக்கு அருவருப்பை தந்துவிடக் கூடாது என்று அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்தப் பெண்ணும் அன்பாக - ஒழுங்காக நடந்து வந்தாள். அவள் வீட்டார் செய்த 'உபதேசத்'தாலும் நடந்தது நடந்துவிட்டது. இனி மேல் என்ன செய்வது , என்ற எண்ணத்தாலும் அப்படி நடந்துவந்தாள். இடையில் மனம் பருவத்தின் இயற்கையால் மாறுபட்டு வருந்தினால் சமாதானத்திற்குத்தான் "விதி” என்ற மந்திரம் இருக்கிறதே. அதை 'உச்சரித்'துக் கொள்வாள்.

ஒரு நாள் மாடியில் நிலைக் கண்ணாடியில் இருவரும் நின்று தங்கள் அழகைப் பார்த்தார்கள். முதலியார் உள்ளம் குபீர் என்றது. இதற்கு முன்பு தன் முகத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்திருக்கிறார், அலங்காரம் செய்து கொள்ளும் பொழுது. இப்பொழுது பக்கத்தில் நிற்கும் பதுமை போன்ற அவள் முகம் அவரது முகத்திலுள்ள முதுமையை அதிகப்படுத்திக் காட்டியது. வழுவழுப்பான - கண்ணாடிக் கன்னங்கள் - சுருங்கல் அரும்பி நிற்கும் தம் கன்னங்கள் - பளிங்கு போன்ற அவள் கண்கள் - ஒளி குறைந்த தம் கண்கள், பருவத்தின் பூரிப்பைச் சுட்டிச் சுட்டிக் காட்டும் அவளுடைய உறுப்புகள் - பணப்பெருக்கத்தால் தளர்வை மறைத்துக் கொண்டிருக்கின்ற தம் உடற் கூறுகள். இவைகள் மாறிமாறிக் காட்சியளித்தன முதலியாருக்கு. சட்டென இறங்கிவிட்டார். அதிலிருந்து முதலியாருடைய உள்ளத்தே ஏதோ ஒர் எண்ணம் கவ்விக் கொண்டது.