பக்கம்:எக்கோவின் காதல்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

70

மங்களம் வானொலியைத் திருப்பிவிட்டாள். அன்று நல்ல நாடகம். அதை அந்த வீட்டின் ஒரு புறத்தில் குடியிருந்த இளைஞன் வானொலி அறையின் வெளியில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். நாடகத்தின் பெயர் “காதல் பலி” என்பது. அந் நாடகம் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவது போலவும், உருக்கமாகவும் இருந்ததால் மங்களம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். வெளியில் இருந்த இளைஞன் நாடகத்தின் வாயிலாக நாட்டைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தான். நாடகம் முடிந்தது; இளைஞன் எழுந்தான்; முதலியாரும் வெளியில் சென்றிருந்தவர் வந்துவிட்டார். இளைஞன் செல்வதைப் பார்த்துவிட்டு உள் நுழைந்தார். அவள் கண்ணீரை விரைந்து துடைத்துக் கொண்டிருந்தாள். முதலியாரின் மனக்கண்முன் மாடியில் பார்த்த கண்ணாடி தோன்றியது. உள்ளத்தைக் கவ்விக் கொண்டிருந்த எண்ணம் வேர் ஊன்றத் தொடங்கி விட்டது.

வேரூன்றி விட்டால் கேட்கவா வேண்டும். “நான் வயது ஆனவன். இவள் இளமையின் எடுத்துக்காட்டாக இருக்கிறாள். அவனோ காளைப் பருவத்தான். பஞ்சு இருக்குமிடத்தில் நெருப்பை வைத்திருப்பது சரியில்லை” என்று எண்ணினார். எண்ணத்தின் முடிவில் வீட்டை விட்டுக் காலி செய்யப்பட்டனர் அவ்விளைஞனும் அவனைச் சேர்ந்தவர்களும்.

போருக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்த முதலியாரின் மகன் - மூத்த மனைவியின் மகன் அன்று வந்து சேர்ந்தான்.