பக்கம்:எக்கோவின் காதல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

என்னையும் தான் கணவன் மனைவி என்றால் நம்புவார்களா? பேத்தி என்றால் ஒரு வேளை நம்பலாம். மகன் என்று நீர் சொல்லும் அவர் எனக்கேற்றவர். வறண்டு கிடந்த பாலை நிலத்தில் பாலை ஊற்றினார். பூச்செடியும் வளர்கிறது. செடியை வளர்க்க நான் வெளியில் செல்ல விரும்பவில்லை. - உலகம் தூற்றும், உண்மையை உணராது. ஆதலால் நான் வீட்டிலேயே ......”

"அய்யோ தெய்வமே ! எனக்கா இந்தக் கதி வர வேண்டும்! சொல்லப் போனால் காளி போலப் பேசுகிறாளே! எனக்கே - என் மானத்திற்கே குழி தோண்டுகிறாளே! பாம்பையல்லவா வீட்டில் வளர்க்கிறேன்.”

இவை சிந்தனையில் ஆழ்ந்திருந்த முதலியாரின் மனப் போராட்டம்.

போராட்டத்தின் முடிவில் “ஆம்; அவள் நிலைக்கும் என் நிலைக்கும் பொருத்தம் இல்லை தான். சாதகத்தில் ஏதோ பொருத்தம் சொன்னான். ஆனால் உள்ளப் பொருத்தமில்லை. எந்தப் பொருத்தமுமே இல்லை. அவள் ஓர் இளங்கொடி, பக்கத்திலே இருக்கும் கொம்பிலே தாவிப் படராதிருக்குமா? அவள் பூத்துக் குலுங்கும் செடி. வண்டு மொய்க்காதிருக்குமா? அவள் காண வேண்டிய பருவ இன்பத்தை - மனித இன்பத்தை என்னிடம் காண முடியவில்லை . அதனால் அஃது இருக்கும் இடத்தை நாடினாள். அவனும் இளைஞன், மணம் ஆகாதவன். இஃது அவர்கள் குற்றமன்று. என் குற்றந்தான். இது சரியான தண்டனைதான்” என்ற நிலைக்கு வந்தார்.

“இருந்தாலும் இப்படிச் செய்யலாமா? தாய் - மகன் என்ற முறையாவது கருத வேண்டாமா?”