பக்கம்:எக்கோவின் காதல்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5
கடை முழுக்கு

'அடாடா! என்ன தெய்வகளை! அந்த முகத்திலே எவ்வளவு சாந்தம்! வைரங்கள் 'பளிச்' பளிச் சென்று 'டால்' அடிப்பதைப் பாருங்கள்! அந்த உடம்பைப் பாருங்களேன்! என்ன தேஜசு! கண்கள் அப்படியே கருணையைப் பொழிகின்றனவே ! எல்லாம் ஈசுவரானுக்கிரகம். அவர் தெய்வாம்சம் . அரகரமகாதேவ!”

“டே, கண்ணா ! இந்தப் பைத்தியத்தைப் பாருடா! தெய்வாம்சமாம்! ஈசுவரானுக்கிரகமாம்! அந்த ஆசாடபூதியின் கண்ணிலே கருணையா பொழிகிறது? காதலை அல்லவா கக்குகின்றன அந்தக் கண்கள். அதோ அவள் அழகிலே ஈடுபட்டு அப்படியே சொக்கிப் பிள்ளையார் போல் உட்கார்ந்திருக்கும் இவரைப் பார்த்து இப்படியெல்லாம் உளறுகிறானே!”

அன்று ஐப்பசி மாதக் 'கடைமுழுக்கு', காவிரியிலே பாவத்தைக் கழுவிப் புண்ணிய உருவங்களாகத் திகழ வேண்டும் நாள் அது. அன்று நானும் என் நண்பன் மாறனும் மழையில் அகப்பட்டு ஒதுங்கி நின்றபோது பண்டார சந்நதிகள் அழகிலே ஈடுபட்ட பக்தர் பகர்ந்ததையும், அதைக் கேட்ட மாணவர்கள் பேச்சையுந்தான் மேலே தந்துள்ளேன்.