பக்கம்:எக்கோவின் காதல்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

81

 கொண்டிருக்கும் அந்தக் கூந்தலிலிருந்து மழைநீரைத் தட்டிக் கொண்டிருக்கும்பொழுது ஒவ்வொரு அசைவிலும் என்மனம் ... அதிகம் ஏன் சொல்ல வேண்டும்- என்னையே மறந்தேன்.

“சுந்தரம்” என்று தோளில் தட்டினான் என் நண்பன்.

தூக்கிவாரிப் போட்டது. சுய உணர்வு பெற்றேன்.

“சுந்தரம்! நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். நீ வேறு கவனமாக இருக்கிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“அதோ பார் அந்தப் பாவையை. பொற்சிலை போன்ற அவள் அழகைப்பார். தெய்வலோகப் பெண்போல்....!”

“சேச்சே எங்கே போனாலும் இந்த வேலைதானா! வழியில் போகிறவர்களைப் பற்றி நமக்கென்ன? அது சரி தெய்வலோகத்தில் எத்தனை நாளப்பா இருந்தாய்?” என்று கிண்டல் செய்தான்.

"மாறா! நீயே பார்! உன் மனமுங்கூடக் கெட்டுவிடும் அவளைப் பார்த்தால் என்று சொல்லிக் கொண்டு அவனுடைய முகத்தை அவள் பக்கம் திருப்பினேன். அவளைப் பார்த்ததுதான் தாமதம் மாறன் முகம் மாறி விட்டது. என் கையைப் பிடித்துப் பரபர என்று இழுத்துக் கொண்டே சென்று விட்டான். மழையைக் கூடப் பொருட்படுத்தவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நீங்கினேனே ஒழிய அவள் என் மனத்தை விட்டு நீங்கவில்லை.

எங்கள் ஊருக்குச் சென்று விட்டோம்.