பக்கம்:எக்கோவின் காதல்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

85

செய்துவிட்டால் அவளைக் கெட்டுவிட்டாள் - சமூகத் துரோகி என் றெல்லாம் தூற்றுகிறது இந்தச் சமூகம். இது பெரிய அநியாயம். குற்றம் எங்கிருக்கிறது என்று அறிந்து குற்றத்தை நீக்க ஒருவரையும் காணவில்லை - அதைவிட்டுப் பாவம் பெண்களைக் குறை கூறுகிறார்கள்" என்று உணர்ச்சியாகப் பேசினாள்.

“ஆம்!ஆம்!” என்றேன் நான். அவ்வளவு தான் என்னால் பேச முடிந்தது. படமும் அவள் சொன்னதைத் தான் விளக்கிக் கூறியது.

படம் முடியும் சமயம் மழை வந்துவிட்டது. “அடடா! மழை வந்துவிட்டதே! எப்படி வீட்டிற்குப் போவது” என்றேன்.

“ஏன்! உங்கள் வீடு எங்கிருக்கிறது?” என்றாள்.

“நான் இந்த ஊரிலில்லை . என் நண்பன் வீட்டில் தங்கியுள்ளேன். "மெளண்ட்ரோடு”க்குப் பக்கத்தில் இருக்கிறது" என்றேன்.

“அப்படியானால் என்வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அங்கு வந்து இருந்து விட்டுக் காலையில் போகலாம். இனிமேல் “ட்ராமும் இல்லை ” என்றாள்.

"ம்ம், அதற்கென்ன,” என்று அசடு வழியப் பதில் கூறினேன். உள்ளுக்குள்ளே ஆனந்தக் கூத்து. அச்சமும் ஒரு பக்கம் இருந்தது. எல்லாம் அவன் செயல் என்று நானே சொல்லிக் கொண்டேன்.

படமும் முடிந்தது. அவள் அழைப்பிற்கிணங்க அருகிலிருந்த அவள் வீட்டிற்குச் சென்றேன்.