பக்கம்:எக்கோவின் காதல்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

91

மனைவியைத் தாசியாக்கியது சமூகம் மட்டுமன்று. நான் தான் முதற்காரணம். அவள் என் அத்தைமகள். என் தாய் சொல்லுக்காக அவளை மணக்க மறுத்தேன். அவள் அந் நிலைக்கு ஆளானாள். அந்நிலைக்கு ஆளாக்கிய நான் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன். எப்படி உன் திருமணத்தில் தொண்டாற்ற முடியும்? இப்பொழுது என்னை மன்னிப்பாயா? உங்கள் இருவரையுமே வேண்டுகிறேன் மன்னியுங்கள் என்று. இயன்றால் உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன். இன்று கப்பலில் புறப்படுகிறேன். வணக்கம். மன்னிப்பை வேண்டும்.

மாறன்

கண்ணீரைத்துத் துடைத்துக் கொண்டே கடிதத்தை முடித்தேன். அவளும் விம்மி விம்மி அழுதாள். அந்த விம்மலை மாற்ற வானொலியைத் திருப்பி விட்டேன். மாறன் கடைமுழுக்கன்று அவளைப் பார்த்தவுடன் மழையையும் பாராமல் என்னை இழுத்துக் கொண்டு சென்றதன் காரணம் இப்பொழுதுதான் தெரிந்தது. அவன் மணக்க வேண்டிய பெண் இப்பொழுது என் மனைவி. ம்ம்! நமது மூடத்தனங்களுக்கு என்று “கடை முழுக்கு” வருகிறதோ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.